Sunday, May 12, 2019

வாராகி கோலாட்டம்


வாராகி  கோலாட்டம்
கோலாட்டமாம் கோலாட்டம்
குதித்தடிக்கும் கோலாட்டம்
நாலாபக்கம் சுற்றியே
நாமடிக்கும் கோலாட்டம்   - கோலாட்டமாம்
*
வாராகி கோலாட்டம்
வட்டமிடும் கோலாட்டம்
சீராட்டிப் பாடியே
திரிந்தடிக்கும் கோலாட்டம் – கோலாட்டமாம்
 கைமாற்றி அடியுங்கடி
கால்தூக்கி அடியுங்கடி
தையாதையா என்றாடியே
தாளம் போட்டே அடியுங்கடி - கோலாட்டமாம்
 வார்த்தாளி பேர்பாடி
வளைந்து வளைந்து அடியுங்கடி
நேர்த்தியாக அடியுங்கடி
நிற்காம அடியுங்கடி    -       கோலாட்டமாம்
 தண்டநாதா பேர்பாடி
தத்தித்தத்தி அடியுங்கடி
பெண்டுகளா அடியுங்கடி
பிரிந்து கூடி அடியுங்கடி  --     கோலாட்டமாம்
 எருமை ஏறி வருபவளை
ஏத்திப் பாடி அடியுங்கடி
விரைந்து விரைந்து அடியுங்கடி
மேல் கைதூக்கி அடியுங்கடி  -     கோலாட்டமாம்
குதிரை மேலே வருபவளைக்
குதித்துப் பாடி அடியுங்கடி
சதிராடி அடியுங்கடி
சந்தோஷமா அடியுங்கடி -       கோலாட்டமாம்
 பன்றிமுகம் கொண்டவளைப்
பாடிப்பாடி அடியுங்கடி
ஒன்று விட்டே ஒன்றுதாவி
உற்சாகமாய் அடியுங்கடி  -        கோலாட்டமாம்
*
வேகவேக வேகமாக மேலும் கீழும் கோல்கள் தட்டி
ஏகமாக முன்னே சென்று வேகமாகப் பின்னேவந்து
நாகம் போலே கீழ்படிந்து நன்கு தேகம்தான் நெளிய
ஆகும் நலம் வேண்டி வேண்டி அடியுங்கடி கோலாட்டம் -  கோலாட்டமாம்
*
கைவளையல் சத்தமிட
கால்பாதம் தாளமிட
தை தை தை தை தையெனவே
தாளகதி ஓங்கிவர
*
அடியுங்கடி அடியுங்கடி அடியுங்கடி கோலாட்டம்
அம்மையவள் வாராகி கோலாட்டம் அடியுங்கடி
துடிப்புடனே அடியுங்கடி துள்ளித் துள்ளி அடியுங்கடி
சுத்திச் சுத்தி அடியுங்கடி தோள்நி மிர்ந்து அடியுங்கடி   -கோலாட்டமாம்



No comments:

Post a Comment