Friday, May 10, 2019

கானூர் பிரளய விடங்கேசர் இரட்டை மணி மாலை


27-1 85 அன்று மதுரை அருகே பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டத்தில் உள்ள கானூர் பிரளயவிடங்கேசர் கும்பாபிஷேகத்தின் போது அரங்கேறிய  இரட்டைமணிமாலையை இங்கு இடுகிறேன்.  64 திருவிளையாடல்களுள் ஒன்று நிகழ்ந்த இடம் அந்த ஊர்.

கானூர் பிரளயவிடங்கேசர்  இரட்டை மணிமாலை


காப்பு

பீடுயரும் கானூர் பிரளயவி டங்கர்மேல்
பாடும் மணிமாலை பாங்குறவே- நீடுபுகழ்
தாண்டவனே, கானூர்த் தயாபரனே, ஐங்கரத்து
ஆண்டவனே  நீயே அருள்.

                                நூல்

வெண்பா

உலக உருண்டை ஒருகண மேனும்
விலகி நடவா விதியை- நலமாய்
விதித்தவா, அண்டம் விளைத்தவா, ஞானம்
பதித்தவா, எம்மைக்கண் பார்!                                            1                                       
கட்டளைக் கலித்துறை

பார்வை படுவன பச்சை வயல்கள், பனிமலரின்
வேர்வை படுவன வெய்யோன் கதிர்கள், விழுந்தமலர்ப்
போர்வை படுவன பூவையர் சேலை, புவியினிலே
தீர்வை படுவன தென்னா டுடையவன் தீர்ப்புகளே!                        2
               
வெண்பா

தீர்ப்பை எழுதும் சிவகாமி கேள்வனே
பார்ப்பாய்க் குதித்தே பறக்கின்றோம்-சேர்ப்பாய்
வலிவும், நலமும், வளமும், அழகும்
பொலிவும் திகழும் புகழ்!                                                3

கட்டளைக் கலித்துறை

புகழ்ந்திடும் சொற்குப் பொருள்தரும் கானூர்ப் புரவலனே
அகழ்ந்திடும் பக்தி அடியவர் நெஞ்சில் அமர்பவனே,
நிகழ்ந்திடும் யாவும் நினதருள் ஆணை நெறியலவோ?
திகழ்ந்திடும் வெற்றி சிறந்திட ஓர்மொழி செப்புகவே!                     4

 வெண்பா

செப்பை அடுக்கிச் சிறுவர்கள் ஆடுகிறார்
அப்பா உனக்கண்டம் அப்படியோ- ஒப்பில்லா
மாமணியே, கானூர் வதிமணியே, நெஞ்சத்துத்
தூமணியே, நீயே துணை!                                                       5

கட்டளைக் கலித்துறை

துணைக்கரம் நீட்டித் துவண்டு பசியால் துடிதுடித்து
வணக்கங்கள் சொல்லி வளைந்து, மறுகி  மனமிளகாப்
பிணக்குடை யார்முன் பிணிபடும் ஈனப் பிறவியுண்டோ
மணக்கிற கானூர் வதியும் சிவனை வணங்கிடினே!                               6

வெண்பா

வணங்கிடக் கைகளும், வாழ்த்திட வாயும்
இணங்கிட நெஞ்சும் இருக்க- பிணங்கியே
என்னென்ன வோசெய்தே எங்கெங்கோ செல்கிறோம்
பொன்தருவான்  இங்கிருக்கும் போது                                            7
               
கட்டளைக் கலித்துறை

போதுள்ள போதே புறப்பட்டு வாருங்கள், பொற்புடனே
மாதுள்ள தேவன் வழிபார்த் திருக்கின்றான், வாய்த்திடவே
ஏதுள்ள தென்னவே ஏங்காதீர், எந்நாளும் எவ்விடத்தும்
யாதுள்ளும் உள்ள அரனே அளிப்பான் அபயங்களே!                              8

வெண்பா

அபயம் அவன்  தருவான் அவ்வழியில் நாமும்
உபயம் அளித்தே உயர்வோம்- சுபமாக
எல்லாம் நடக்க இராமசா மிக்கருள்
வல்லான் தருவான் வரம்!                                                       9

கட்டளைக் கலித்துறை

வரம்புக்குள் நம்மை வளைய விடுக்கின்ற மாமருந்தை
நரம்புக்குள் நாதம் நடத்திடும் நாதனை, நம்பிக்கையை
பிரம்புக்கு மேனி பெருமையாய்க் காட்டிய பேரருளை
சரண்புக்க பேருக்குச் சங்கட மே இல்லை சத்திய மே!                            10

வெண்பா

சத்தியம் காக்கும் சமய கருப்பனொடு
உத்தம மீனாக்ஷி ஊர்த்தெய்வம்- மத்தியிலே
தாண்டவவி  நாயகனும் தாங்குதிரு வேங்கடனும்
ஆண்டவனாம் ஈசன் அணி!                                                      11

கட்டளைக் கலித்துறை

அணிசேனை சேர்க்க அரசன் கொடுத்த அருநிதியில்
மணியான மண்டபம் வாகாகக்  கட்டி வணங்கிநின்ற
துணிவான பக்திகொள் சுந்தர சாமந்தன் தோத்தரிக்க
தணியாத சேனையைத் தான்கொணர்ந்தான் பதம் சாருங்களே!            12

வெண்பா

சாரும் உளிகொண்டு தட்டாம  லே முளைத்த
சீருடைய கானூர்ச் சிவலிங்கம்- பாரினிலே
ஈசனே நேரில் இறங்கிவந்து  காக்கின்ற
நேசத்திற் கீதன்றோ நேர்!                                                        13

கட்டளைக் கலித்துறை

நேர்செல்லும் மக்கள், நெருங்கிய வீதிகள், நேசமனம்
வேர்செல்லும் பண்பாடு, வித்தகம் காட்டி விளங்குநெறி
சீர்சொல்லும் பேரேரி, தென்னை , கழனி, செழுங்கதிர்கள்
ஊர்செல்லச் சாமிகள் ஒவ்வோர் திசையும் உதவுவரே!                    14

வெண்பா

உதவி எனுமுன்னே ஓடிவரும் தெய்வம்
பதவி அளிக்கும் பரமன் - விதமாய்
ந ரிபரி க்கிய நாயகன், கானூர்ப்
பிரளயவி டங்கர்புகழ் பேசு.                                                      15

கட்டளைக்கலித்துறை

பேசென்று சொல்கின்றாய், பேசுகின் றோம்பின் பெருகுகவி
வீசென்று சொல்கின்றாய், வீசுகின் றோம்நீ விதித்தபடி
தூசொன்றில் விண்ணைத் துளைத்திடும் சக்தி துலங்குமெனில்
தேசொன்று நின்புகழ் செப்புவேன் சக்திகள் சித்திக்கவே!                          16

வெண்பா

சித்திக்க வேண்டுவன சிந்தனைகள், இந்நாளில்
புத்திக்கும் நெஞ்சுக்கும் போராட்டம் - வித்துக்குள்
காயிருக்கும், நல்ல கனியிருக்கும், நெஞ்சத்துள்
நீயிருக்க ஏனிந் நிலை?                                                         17

கட்டளைக் கலித்துறை

நிலைப்பில் நிலைக்கும் நிலையே, நிறைவே, நினைந்திடுமுன்
மலைப்பே மனத்தை வதைத்திட லாமோ மதிமயங்கித்
தலைப்பை மறந்து சபையில் திணறும் தகைமையிலே
அலைப்புற் றிடாமல் அனைத்திலும் வெற்றி அருளுகவே!                         18

வெண்பா

அருள்நலம் காட்ட அறுபத்து  நான்கு
திருவிளை யாடல் திளைத்தாய் - பெருமைதரும்
அஞ்செழுத்து மந்திரத்தை  ஆணி அடித்திடுவாய்
நெஞ்சத்தில் எந்நாளும் நின்று!                                                           19                                             
கட்டளைக் கலித்துறை

நின்றும் நிமிர்ந்தும் நெருங்கிடும் தெங்கின் நிறையிளநீர்
என்றும் கிடைக்கும் எழில்வளர் கானூர் எழுந்தருளி
நன்று புரியும் நமசிவா யன்பதம்  நாடிடுக
ஒன்றும் பெரிதில்லை ஒவ்வொன்றும் வெற்றி உலகத்திலே!                              20

நூற்பயன்

அணிமாலையாக அமைந்த இரட்டை
மணிமாலை போற்றி வணங்க - பிணியகலும்
பேறெல்லாம் கிட்டும், பெருகி வருஞானம்
ஆறெல்லாம் நன்மை அறி!

No comments:

Post a Comment