Saturday, May 11, 2019

கயத்தாறு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி இரட்டைமணி மாலை


கயத்தாறு  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி  இரட்டைமணி  மாலை

                   காப்பு
எங்கள் அகிலாண்ட ஈஸ்வரி பேர்பாடும்
மங்கா இரட்டை மணிமாலை- பொங்கிவரப்
பாப்பாடும் நல்ல பரிசளிப்பாய், ஐங்கரனே
காப்பாய், அருள்வாய் கவி!

                   நூல்

                 வெண்பா

உலகம் உருளுவதும் உன்னாலே, அம்மா
இலகும் கருணை இறைவி - நலமருளும்
எங்கள் அகிலாண்ட ஈஸ்வரியே, போற்றுகிறோம்
பங்கயத் தாளைப் பணிந்து.                                   1

                   கட்டளைக் கலித்துறை

பணிகொண்ட ஈசன் பரமன் அகிலங்கள் பாலிப்பவன்
மணியுண்ட கண்டன் மகேசன் அமரர் வலம்வரவே
அணிகொண்டு தேவி அகிலாண்ட ஈஸ்வரி  அம்மையுடன்
இணைகொண்டு காக்கும் இறைவன் பதங்கள் இறைஞ்சுவமே!    2
    
                 வெண்பா

இறைஞ்சிட வேண்டும், இறையவன் நாமம்
உறைந்திட வேண்டும் உளத்தில் - நிறைந்திடும்
நல்லருள் கோதண்ட ராமேஸ்வ ரர்கோவில்
எல்லோரும் போற்றும் இடம்.                                   3

                 கட்டளைக் கலித்துறை

இடங்கண்டு வந்த இறைவன் கயத்தா றெழிற்கரையில்
தடங்கண்டு கோயில் தனில்சேர்ந்தான், பாகம் தனையுடையாள்
உடன்கொண்டு காக்க உளங்கொண்டான், தீமை ஒறுத்திடவே
திடங்கொண்ட சீராமன் சேவித்த திந்தத் திருத்தலமே!            4
  

                வெண்பா

தலச் சிறப்பும் நல்ல தருச் சிறப்பும் வாய்த்த
நிலச் சிறப்பும், ஆறு நிகழ்ந்த - நலச் சிறப்பும்
கொண்டிலங்கும் இவ்வரிய கோயில் சிறப்பெல்லாம்
விண்டுரைப்ப தென்ன விதம்?                                   5

         கட்டளைக் கலித்துறை

விதவித மாக விரிந்திடு விந்தை விவரமெலாம்
பதம்பத மாகப் படைத்திடப் போமோ? பரிவுடனே
இதந்தரும் வண்ணம் இறைவன் இறைவி இணைபதமே
நிதநிதம் போற்றிட நெஞ்செழும் என்றைக்கும் நிம்மதியே!             6                                              
                   
                   வெண்பா

மதிக்கின்ற பேறளிப்பாள், மாதா எனவே
துதிக்கின்ற பேர்க்குத் துணையாய் - விதிமாற்றிக்
காக்கின்ற தேவி, கனிவாயிக் கோயிலிலே
பூக்கின்ற ஞானத்தின் போது.                                         7

                கட்டளைக் கலித்துறை

போதுள்ள போதே புறப்பட்டு வாருங்கள், பொற்புடனே
மாதுள்ள  கோதண்ட ராமேசன் நல்ல வரந்தருவான்
தீதெல்லாம்  போகும், திடம்வரும், செல்வம் செழித்திருக்கும்
யாதுள்ளும் உள்ளான் அவனென்றே எண்ணும் அகம்வருமே!            8

                வெண்பா

அகங்கொண்ட போதில் அம்மை நமக்குச்
சுகங்கொண்டு வந்து சொரிவாள் - தகவுண்ட
பக்திக்கே என்றும் பரிந்துவரும் தேவியவள்
சக்தி அடியே சரண்.                                                   9
           
                கட்டளைக் கலித்துறை             

சரணென்று சீராமன் தாள்போற்ற, ஏதும் தகைமையின்றி
முரண்கொண் டிராவணன் மோதிடும் போது முறியடிக்க
அரணென்று கோதண்டம் அன்பாய் அளித்த அரியபிரான்
பரமென்று சார்ந்தோரைப் பாலிக்கும் தேவன் பரம்பொருளே!            0
               
                 வெண்பா

பொருளென எண்ணும் பொறிகளைக் கட்டிக்
கருதிடும் ஓர்நெறி காட்டி- அருள்திறம்
கூட்டும் இறைவனாம் கோதண்ட ராமேசன்
வீட்டினைக் காட்டும் விளக்கு.                                       11

                கட்டளைக் கலித்துறை

விளக்கம் அகத்தியர் வேந்தர்க்குச் சொன்னார் விரிவுடனே
திளைக்கும் மகிழ்வு சிறக்கக் களித்தான் திறலரசன்
அளித்த முறையில் அனந்த குணபாண்டி ஆகியவன்
நெளிவு சுளிவுகள் நீக்கி அமைத்தான் நெறிகளையே!                 12
             
                 வெண்பா

நெறிகள் வகுத்த வழியே தினமும்
முறைகொள் வழிபாடு மூட்டி- செறிவாய்
அவசிய மான அனைத்தும் புரிந்தான்
நிவந்தம் அளித்தான் நிறைந்து                                           13

            கட்டளைக் கலித்துறை

நிறையொளிக் கற்கள் நெடுந்தரை மீது நெறிபரப்பி
அறவழிச் சாலை அமைத்து, வழுத்தும் அடியவர்கள்
முறையொடு நேமம் முனைய வசதிகள் முன்புரிந்தான்
மறையவர் வேதம் வழங்கிடக் கட்டினன் மண்டபமே!                     14

                  வெண்பா 

மண்டும் வரிசை வகைசெய்து  நீள்மதில்
கண்டோர் வியந்திடக் கட்டினான் - தொண்டுபுகழ்
ஆறை நகர்வாழ் அகிலாண்ட ஈஸ்வரிபேர்
கூறுவோர்க் கில்லை குறை.                                             15

            கட்டளைக் கலித்துறை

குறைவற நாள்தோறும் கூடல் நகர்ச்சொக்கன் கோயில் சென்று
முறையுடன் போற்றிய பாண்டியன் பின்னர் முதுமைவர
இறைவன் அவனைத் திருவாறைக் கேகி இறைஞ்சுகென்றான்
மறைமொழி கேட்டு மகிழ்ந்தனன் மன்னன் நல் வாய்ப்பெனவே!          16 
            வெண்பா

வாய்ப்பாக உச்சினி மாகாளி வாசல்தூண்
தாய்ப்பாசத் தோடிருந்து தாங்கிவர- ஆய்ந்தருள்
ஆவுடையார் மேலே அருள் சனி ஈஸ்வரனும்
மேவுகிறான் காகத்தின் மீது.                                             17
    
              கட்டளைக் கலித்துறை

மீதி இருக்கும் வினையின் பயன்வழி மீண்டுவரும்
தேதி குறிக்கும் செயல்வேண்டா மென்றால் திடமுடனே
ஆதி  இறைவி அகிலாண்ட ஈஸ்வரி ஆலயத்தில்
சோதி விழுநாள் சுடர்கண்டு போற்றித் தொழுமின்களே!                   18

             வெண்பா

தொழுதிடக் கைகளும் தோத்தரிக்க வாயும்
பழுதறத் தந்த பரமன் - இழைநாமம்
என்றும் ஜபித்தே இருப்பாய்நீ, பின்பாரேன்
உன்றனுக்கு ஈடெங்கே உண்டு?                                          19

            கட்டளைக் கலித்துறை

உண்டும் உறங்கியும் ஓடிடும் நாள்கள் உலைந்துவிடின்
மண்டும் பயனெதும் மண்ணிலே உண்டோ, மனிதர்களே
கொண்டென்ன வந்தோம்நாம்? கொண்டென்ன போவோம், குணமிகவே
உண்டென்றே அம்மை உளம்சேர்ப்பீர், நன்மை, உலகத்திலே!                 20

                 நூற்பயன்

இரட்டை மணிமாலை எண்ணிப் படித்தால்
மிரட்டும் வினைகள் விலகும்- இரட்டிப்பாய்
நன்மைவரும், நல்லபுகழ் நாடிவரும், நல்லமைதித்
தன்மைவரும், நல்ல தரம்.   
            
அரங்கேற்றம்:  3-7-2009 மாலை 6-30
இடம்- ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஆலயம்.கும்பாபிஷேக யாகசாலை முன்பு அரங்கேற்றப்பட்டது

No comments:

Post a Comment