Friday, May 10, 2019

திருமுருகன் திருவவதாரம்


1-5-1986ம் ஆண்டு இரத்னகிரி முருகன் கோயிலில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது.
அக்கவியரங்கிற்கு நான் தான் தலைமை. நிறையக் கவிஞர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவருக்கும் கந்தபுராணத்தில் வரும் கதாபாத்திரமோ அல்லது கதை நிகழ்ச்சியோ தலைப்பாய்க் கொடுக்கப்பட்டது. நான் ஒவ்வொருவரையும் அழைக்கையில் அந்த அந்தத் தலைப்பைப்பற்றியும் சிறிது எழுதி அழைத்தேன். அதானால் கந்தபுராணம் முழுதையும் நான் சுருக்கமாக எழுதியதுபோல் ஆகிவிட்டது. எனக்குக் கிடைத்த தலைப்பு- திருமுருகன் திருவவதாரம். அந்தக் கவிதையை இங்கே இடுகிறேன்.. கவியரங்கம் 5 மணி நேரம் நடந்தது. கவியரங்கம் நடைபெற்றநேரம் முழுதும் ரத்னகிரிச்  சாமியார் பாலமுருகனடிமை என் அருகிலேயே அமர்ந்திருந்தார்.

திருமுருகன் திருவவதாரம்

அறுசீர் விருத்தம்

"ஓர்மணல் தன்னை இங்கே உருப்பெறச் செய்யவேண்டின்
பார்தவம் கோடி யாண்டு பண்ணியே தீரவேண்டும்
யார்வர வதுவும்இ ங்கே  அற்பமாய் நடப்ப தில்லை
வேர்விடும் முன்னே வித்துள்  வேள்விகள் நடக்க வேண்டும்"

கந்தனின் பிறப்பிற் காகக் காத்திடும் தேவர் முன்னே
உந்தியில் பூத்த தேவன் உரைத்தனன் இந்த வண்ணம்
"எந்தநாள் அந்த நாளென் றேங்கிடும் நம்மைக் காக்கும்
அந்தநாள் வந்து சேரும் அமரர்காள் கலங்க வேண்டாம்"

கலங்கிட வேண்டாம் என்று கமலத்தான் சொன்ன போதும்
பலங்கெட வைத்த சூரப் பகையினை விட்டு வைத்தால்
நலங்கெட மேலும் மேலும் நலிந்திட வேண்டும் என்றே
புலம்பினர் தேவர் , நொந்து புழுங்கினர், வெந்து போனார்

சூரனின் கோபத் தீயாம் சூட்டினைத் தவிர்ப்ப தற்கு
மேருவின் உச்சி மேட்டில் வேதனின் தலைமையின் கீழ்
கூருடைக் கவலை குத்தக் கூட்டமாய்த் தேவர் வந்தார்
தீருமோ துயரம் என்ன செய்வமென் றேங்கி நின்றார்

திருமணம் நிகழ்ந்து பன்னாள் சென்றதன் பின்னும் ஏனோ
ஒருமகன் தோன்றக் காணோம் , உயர்சிவன் கருத்தை ஈர்த்துப்
பெருகும்நம்    துயரந் தன்னைப் பேசிடப் போவா ருண்டோ
கருகிய மன்மதன்தன் கதையினை மறக்கப் போமோ?

அயனையே அனுப்ப லாம்தான், அந்தநாள் பஞ்சாங் கத்தின்
வயணமே சூர னுக்கு வழங்கிடப் போக வேண்டும்
மயனையே அனுப்ப எண்ணில் மாளிகை படைப்ப தற்கு
நியமனம் பெற்றி ருந்தான், நெஞ்சிலே துணிவுப் பஞ்சம்

வாயுவோ வாய்வுத் தொல்லை வந்ததாய் ஒதுங்கிக் கொண்டான்
சேயினைப் பிரிந்த துக்கம் தீருமோ என்றான் இந்த்ரன்
காயழல் அக்கி னிக்குக் காய்ச்சலாம் பதுங்கிக் கொண்டான்
போயெதிர் நின்று சொல்லும் புண்ணியர் எவரும் இல்லை

ஓம்நமச் சிவாய என்றே ஒருமன தாகக் கூடி
நாம்கனிந் துரைத்தால் போதும் நம்துயர் தீர்ந்து போகும்
ஆம்வழி அதுதான் என்றே அயனெழுந் தியம்ப விண்ணோர்
தாம்பினை அறுத்த கன்றாய்ச் சார்ந்தனர் கயிலைக் குன்றம்.

ஓடியே வந்த விண்ணோர் ஓம் நமச் சிவாய என்று
பாடியே குரல் கொடுக்கப் பரமனும் கண்வி ழித்தான்
கூடிய கயிலைக் குன்றக் கோபுரம் மின்ன லாச்சு
நீடிய மலையில் எங்கும் நிறைந்திடும் நீற்றுப் பூச்சு.


"மூலமே முதலே போற்றி, மொழியெலாம் கடந்தாய் போற்றி
ஆலமே உண்ட எங்கள் அண்ணலே அருளே போற்றி
காலமே கடந்து நிற்கும் கடவுளே கனிவே போற்றி
நாலுவே தங்கள் கண்ட நாதனே போற்றி போற்றி!

பாம்பணி மார்பா போற்றி, பார்வதி கேள்வா போற்றி
தீம்புகள் பொறுக்க ஒண்ணாத் தெய்வமே தேவா போற்றி
சாம்பனே போற்றி, கங்கை தலைமிசைக் கொண்டோய் போற்றி
ஓம்நமச் சிவாய போற்றி, உத்தமத் தேவா போற்றி

அம்மையே அப்பா போற்றி, அடியவர்க் கருள்வாய் போற்றி
செம்மையே தங்க மேனித் தெய்வமே சிவனே போற்றி
நம்பினோர் வாழக் காலம் நடத்துவோய் போற்றி, ஞானத்
தம்பிரான் போற்றி எங்கள் தலைவனே போற்றி போற்றி

பரமனே போற்றி, ஆதிப் பரம்பொருள் பதியே போற்றி
வரமெலாம் அருளுகின்ற வள்ளல்மா மணியே போற்றி
புரமெரித் தாண்டு கொண்ட புனிதனே புலவா போற்றி
சுரமனைத் தும்ப டைத்த சுருதியே இசையே போற்றி

சாமியே போற்றி, அன்புச் சங்கரா போற்றி, அந்தக்
காமியை எரித்து மீட்ட கண்ணுதல் தேவே போற்றி
ஓமென ஒலித்து நிற்கும் உன்னதப் பொருளே போற்றி
தாமதம் செய்திடாமல் தண்ணருள் செய்வாய் போற்றி

தாண்டவா போற்றி மிக்கத் தண்ணளி செய்வாய் போற்றி
ஆண்டவா போற்றி, கையில் அங்கியைக் கொண்டோய் போற்றி
வேண்டவா என்றிடாமால் வேண்டிய அளிப்பாய் போற்றி
மூண்டிடா மூலமே எம் முன்னவா போற்றி போற்றி

உன்னையே நிகர்க்க இங்கே ஒருமகன் பிறந்தால் தானே
இன்னல்கள் நீங்கி நாங்கள் இருந்திடக் கூடும் , கொன்று
தின்னுமோர் பாவி, சூரன் தீர்ந்திட வேண்டு மென்றால்
மன்னவா, உங்க ளுக்கு மகவொன்று பிறக்க வேண்டும்.

அந்தநாள் தட்சன் செய்த யாகத்தில் கலந்து கொண்டு
வந்தனை பெற்ற தாலே வந்ததிம் மோசம் தேவா
நொந்தது போதும், நாங்கள் நொடித்தது போதும், எங்கள்
தந்தையே உடனே மீண்டும் தந்தையாய் ஆக வேண்டும்"


அரியுடன் அயனும் தேவர் அனைவரும் வேண்டக் கேட்ட
அரன்மனம் கனிந்தான், பக்கத்து அம்மையைத் தணிந்து பார்த்தான்
"விரைந்தொரு மகனை நீங்கள் வேண்டிய வண்ணம் நானே
தருகிறேன், நீங்கள் கொண்ட சங்கடம் தீரும்" என்றான்.

வாடிய நிலைமை மாற்றும் வார்த்தைகள் கேட்டதாலே
ஆடினர் சிலபேர், பேசா தயர்ந்தனர் சிலபேர், போற்றிப்
பாடினர் சிலபேர், கண்கள் பனித்தனர் சிலபேர், தாவி
ஓடினர் சிலபேர், எங்கும் உவகையின் வெள்ளம், வெள்ளம்

குழந்தையும் தோன்றும் போது குளுமையா யிருப்பதற்கே
இழைந்திடும் தென்றல் வீச ஏவினான் வாயு தேவன்
தழலதன் வெம்மை போக்கித் தண்ணென இருந்தான் அங்கி
விழைவுடன் பாடல் பாடி வேண்டினர் விண்ணோர் எல்லாம்.

பையனுக் கருமையான பரிசினைத் தேர்ந்தெ டுக்க
வையகம் தன்னைச் சுற்றி வந்தனன் பரிதிச் செல்வன்
கையினைத் தட்டி மாயன் கருடனைச் சைகை செய்து
பையனின் மாமா என்றன் பரிசுதான் முதலில் என்றான்

அம்மையோ நாணம் கொண்டாள், ஐயனைக் கடைக்க ணித்தாள்
தம்மையோ ரொப்பில்லாத தனிமுதல் நீல கண்டன்
செம்மைசேர் முகங்கள் ஆறாய்த் திகழ்ந்தனன், முகமொவ் வொன்றும்
தம்மரும் நெற்றிக் கண்ணின் தாழினைத் திறந்த தன்றே!

வியனிலைச் சிந்து

நெற்றிக் கண்கள் ஒற்றைத் திறப்பில்
பற்றும் பொறிகள் ஆறு பறந்து
சுற்றித் திரிந்தனவே- அடடா
சூடு பரந்ததுவே

கண்ணொன் றுக்கோர் எண்ணொன் றாக
வெண்மைப் பொறிகள் வீறு கொண்டு
விண்ணில் எழுந்தனவே - விண்மீன்
வெந்து விழுந்தனவே!

ஆறு பொறிகள் வீறு கொண்டு
மீறு கின்ற வெம்மை கண்டு
ஆறுகள் வற்றினவே - கடல்மீன்
அடிவரை சுற்றினவே

விண்ணோர் ஓடி வேகம் சாடி
கண்ணு தல்தன் கனிவை நாடி
கண்ணீர் பொழிந்தனரே - அவர்தம்
காலில் விழுந்தனரே

அம்மை தேவி வெம்மை கொண்டு
தம்மை மீறும் சக்தி கண்டு
தம்மனை ஓடினளே- அந்தத்
தாய்மனம் வாடினளே

இரக்க மற்ற அரக்கன் சூரன்
பருத்த இடது பக்கம் துடிக்க
வருத்தம் அடைந்தனனே - நெஞ்சம்
வாடிக் கிடந்தனனே!

வெண்கலிப்பா

பொறிகள் உலாக்கண்டு புன்னகைத்து, சக்தி
அறிந்த சிவனும் அவற்றை வரச் சொன்னான்
ஆண்டான் அழைக்க அடிமை அவசரமாய்த்
தாண்டியே தாம்விரையும் தன்மைபோல் அப்பொறிகள்
யாவும் விரைந்தே அரனடியில்  தாம் ஒதுங்கிப்
பாவம் இவையா படுத்தின வென்றங்கே
யாரும் வியக்க அடங்கி இருந்தனவால்
சூரனைக் கொன்று தொலைக்கச் சிறுகுழந்தை
தாருமெனச் சொன்னால் தழல்பொறிகள் தந்தாரே
தீருமோ துன்பமெனச் சிந்தை கவன்றிருந்த
தேவர்களைப் பார்த்துச் சிவபெருமான் சொல்லுகிறார்
"நீவிர் கவலற்க, நேரும் பொறிகளையே
வாயுவும் அக்கினியும் மாறிமா றிச்சுமந்து
பாயுநதி கங்கையிலே பாங்காய்க் கொடுக்கட்டும்
தன்போக்கில் கங்கை சரவணத்தில் சேர்த்துவிடும்
என்றுரைக்க வாயு எழுந்தான், "மகாதேவா,
வான்சுற்றி வந்த மணிப்பொறிகள் நான்சுமந்தால்
ஊன்வற்றிப் போகாதா? உற்றவலி ஏதெனெக்கு?
என்றன் பிழைபொறுத்து ஏற்றருள வேண்டுமென்றான்
ஒன்றுபோல் அக்கினியும் ஒப்புவித்தான், மாதேவன்
மெல்லச் சிரித்தான்,"விதைக்கிறவன் தன்னிலத்தை
நல்ல தரமாக நயமுள்ள தாய்ச் செய்தே
பின்விதைப்பான், நான் உங்கள் பெற்றி அறிந்துள்ளேன்.
மின்னும் பொறிசுமந்து மேலேக வேண்டுகிற
தெம்பளித்தோம், செல்கவெனத் தேவன் வரமளித்தான்
தம்பலத்தில் மிக்குற்ற தால்வாயு அக்கினியும்
ஆன்ற பொறிகளையே அன்பாகத் தாம்சுமந்து
தோன்றும் குமரன் தொடக்கத்தில் தொண்டுசெய்ய
நேர்ந்த பெருமை நிறைகொண்டு தாம்சென்றார்.
சோர்ந்தவர் மற்றவரின் தோள்மாற்றித் தான் சென்று
கங்கையிடம் விட்டார்கள், கங்கைநீர் வற்றியது.
பொங்குகிற கங்கை புனல்வற்றிப் போனாலும்
சூட்டில் இமயத்தில் சூழ்ந்த பனியுருகி
ஈட்டிவரும் வெள்ளத்தின் ஈர்ப்பில் பொறிகளையே
பூக்கும் சரவணப் பொய்கையிலே சேர்த்ததுவால்.
ஆர்க்கும் அனலில் அதுவற்றிப் போகவில்லை.

அறுசீர் விருத்தம்

பொறிகளென வந்ததிருப் பூரணத்தைக் காத்திடவே பொறுப்பு வாய்ந்த
நெறியுடையார் நெடுமாலும் இந்திரனும் பிரமனுடன் நிறைந்த விண்ணோர்
செறிவுடனே நின்றிருந்தார், சிவபெருமான் தண்ணருளால் பொறிகள் சேர்ந்து
அறுமுகனாய்ப்  பன்னிருகை ஓருடலாய் அவதாரம் ஆகிற்றன்றே!

அண்டமுள ஒளியெல்லாம் ஓருருவில் சமைந்திங்கே அமைந்த தென்கோ?
விண்டுரைக்க மாட்டாத விந்தையெழில் அறுமுகனாய் விளங்கிற் றென்கோ?
பண்டுவந்த மறைஞானம் பாலகனாய் ஓருருவில் பரிந்த தென்கோ?
விண்விளக்கு மண்விளக்க மேதினியில் பெருவியப்பாய் விரிந்த தென்கோ?

ஆனந்தக் கண்ணீரில் அமரரெலாம் முக்குளிக்க ஆடிப் பாட
வானந்தக் காட்சியினால் மகிழ்வுற்று பூமழையின் வரிசை சிந்த
தானந்தக் குழந்தையினைத் தாங்குவதால் செங்கமலம் தழைத்துப் பொங்க
தேனந்தப் பூவிருந்தும் கோத்தும்பி தீண்டாது திரிந்து பாடும்

முற்றறிவு, முழுநிறைவு,இயல்பாகப் பற்றறுத்தல் , முடிவில் ஆற்றல்
பெற்றிருத்தல்,அருளுடைமை, தம்வயமாய்ச் செய்தலெனும் பெருங்குணங்கள்
ஒற்றையுடலில் புகுந்தே அறுமுகமாய் வெளிப்பட்டே அமைந்த தென்னக்
கற்றைமுடிச் சடையானின் கனற்குழந்தை சரவணத்தில் களித்திருந்தான்.

விண்ணுக்கு மேல்தாவி விரிவாயு தீசுமக்க விரிநீர் சேர்ந்து
மண்ணுக்கு வந்தைந்து பூதத்தின் வடிவாகி வளரும் செல்வன்
பெண்ணுக்குப் பிறவாத ஆண்பிள்ளை சுடராகப் பிறந்த பிள்ளை
பண்ணுக்குச் சிறப்பான பைந்தமிழின் உயிராய்ப் பன்னிருகை பெற்றான்

மயில் முதுகில் அரிப்பெடுக்க, வளர்கொண்டைச் சேவற்கு மகிழ்ச்சி பொங்க
கயிலைமலை வதிகின்ற கண்ணுதலான் நெற்றிக்கண் கர்வம் கொள்ள
வெயிலொழுகா மரக்காட்டில் வேங்கைக்கும் கடம்புக்கும் விளக்கம் கிட்ட
பயிலுமெழில் செங்கமலப் பூந்தட்டில் பாலகனும் பயின்று வந்தான்.

அரக்கர்க்குத் தீச்சகுனம், அமரர்க்கு நற்சகுனம் அமையக் கண்டார்
சுருக்கத்தில் விடிவுவரும் எனவெண்ணி விண்ணவர்கள் தொழுது  நின்றார்
நெருக்கத்தில் அக்குழந்தை நிறையொளியைக் கண்டவர்கள் நீங்கா ராகி
உருக்கத்தைத் தருகின்ற தோத்திரங்கள் தாம்பாடி உவகை கொண்டார்.

மரங்களெல்லாம் குடையாக மாருதமே தவழ்ந்துவர, வாளை மீன்கள்
சிரமசைத்து மேலெழுந்து சிறுபிள்ளை முகம் பார்த்துச் சேதி சொல்ல
சுரும்பினங்கள் தேன்மறந்து துதிபாடப் பொய்கைப்பூச் சுடர்க்கிண்ணங்கள்
அரும்பவிழ்த்து மதுசுமந்து குழந்தையினுக் களித்திடவே ஆடி நிற்கும்

அம்மைவழி வாராத அறுமுகற்கு யார்கொடுப்பார் அமுதத் தாய்ப்பால்
எம்மையெலாம் காக்கவந்த இக்குழந்தை என்செய்யும் என்று தேவர்
தம்மனத்தே சிந்தைசெய்தே எழில்கார்த் திகைப்பெண்டிர் தமையழைத்துச்
செம்மலுக்குப் பாலூட்டிச் சீராக வளர்க்கவெனத் தேர்ந்து சொன்னார்.

எழுசீர் விருத்தம்

கார்த்தி கைத்திருப் பெண்டிர் யாவரும் கைதொழுதனர் பிள்ளைமுன்
யார்கொடுப்பது, யாரெ டுப்பது , யார்பு னலிடைச் செல்வது
ஓர்மு கத்தினுக் கோர்குழந்தையாய் ஒன்றொன்றாகவே வேண்டுமே
சேர்கிற பெரும் சிக்கல் மூவிரு பிள்ளைநீ வரத் தீருமே!

என்று மாதரார் வேண்டிக்கொண்டதை ஏற்றுக்கொண்டதப் பேரருள்
ஒன்றொன் றாகவே ஆறு பிள்ளைகள் ஓங்கு பொய்கையில் தோன்றின.
சென்று கார்த்திகைப் பெண்டிர்  தம்மிடம் ஊறிய அமு தூட்டினர்
நன்றுநன்றெனத் தேவ வானவர் ஆடினர் துதி பாடினர்

சூர னாதியர் செய்கொடுமைகள் தீர்ந்திட நலம் சேர்ந்திட
ஈரமாகிய செந்தமிழ்த்திறம் ஏறிட வளம் மீறிடத்
தீரனாகவே கார்த்திகேயனாய்த் தோன்றிய அருட் தீங்கதை
வாரமாகவே கேட்டவர் நலம்வாழ்க வாழ்கவே வாழ்கவே


No comments:

Post a Comment