Friday, May 10, 2019

காலடி பற்றக் கந்தா அருள்வாய்


காலடி பற்றக் கந்தா அருள்வாய்!

கலிவெண்பா

உப்புக் கடலின் ஒளிசேரா ஆழத்தில்
சிப்பி வயிற்றில் திணறிக் கிடப்பவன்நான்
முத்தென்னும் பேருடையேன், மோனம்தான் என்றாலும்
நத்திளம் சிப்பிகளின் நாணமிலாச் சல்லாப
ஓசை அரிப்பினிலே ஓய்கின்றேன், அந்நேரம்
பூசை மணியோசை பூரிப்பை ஊட்டுகிற
ஏதோ ஒரு நாதம் , எங்கேயோ கேட்ட ஒலி
காதாரக் கேட்கக் கடலைக் கடைகிறது
ஓங்காரம், எங்கெங்கும் ஓங்காரம், அந்நாதம்
தாங்கி வரும்பெயரின் சத்தம் எழுகிறது
மூல மறையே முருகா முருகாவென்று
ஓலம் இடும் ஓசை ஓரம் ஒதுங்கிய என்
காதில் விழுந்து கரைகிறது., முன்னாளில்
வேதம் விழுங்கி விழிப்புற்ற இக்கடலும்
சாதகம் செய்கிறதோ, சாரும் ஒளிநாட்டில்
மோதும் கடலலைகள், முத்தமிடும் கோயிலெழும்
நாதப் பிழிவுகளோ? நானறியேன், என்னுள்ளே
ஏதென் றறியாத ஓரெழுச்சி, , இப்பெயரில்
என்ன இருக்கிறது? ஏனிந்தப் பூரிப்பு?
முன்னைத் தொடர்பின் முயக்கா? மொழிகடந்து
உள்ளே உயிர்தூவும் உற்பவமா? உன்னதமா?
வெள்ளமாய் நாதம் விழுகிறது. என்னுள்ளே
ஒவ்வோர் அணுவும் உயிர்க்கிறது, சுற்றியிங்குக்
கவ்வும் இருளும் கலைகிறது, வெட்டுகிற
மின்னல் கரைகிறது, வீங்குகிறேன், நானுமொரு
சின்னச் சுடராய்த் திகழ்கின்றேன், கர்ப்பத்தில்
எத்தனைநாள் காத்திருப்பேன்? என்றேனும் ஓர்நாளில்
முத்துக் குளிக்க முனைபவர்கள் கைபுகுவேன்
சேரும் இடத்தில் சிறைநீங்கி நான்வருவேன்
யாரும் வியக்கும் அளவு பெரியவன்நான்
என்னை விலைபேசி ஏற்பவர்கள் என்பெரிய
சின்னம் கருதிச் சிறைகூட்டி வைப்பாரோ?
என்னை உயிர்த்த இறைவா, அதுவேண்டேன்
மின்னல் ஒளி மேனி மெல்லியலாள் கூந்தலணி
சிக்கித் தவிக்கும் சிறைவேண்டேன், அவர்மார்பில்
சொக்கிப் புரளும் சுகம்வேண்டேன், தெய்வதமே
கந்தா, முருகா, கடலோரம் நிற்பவனே
வந்த குரல்கேட்கும் வள்ளலே, உன்னடியில்
நத்தாக நான்நின்று நாளெல்லாம் உன்முகத்துப்
புத்தொளி காணும் புனிதம் எனக்கருள்வாய்
அந்நாள் வரும்வரையில் யானும் சதைச் சிறையில்
உந்நாமம் கூறி ஒடுங்கிக் கிடக்கின்றேன்
காலடி பற்றும் கனவு நனவாகக்
கோலக் குமரா குறி!
(ஞானஒளி- செப்டெம்பர் 1981)

No comments:

Post a Comment