Friday, May 10, 2019

ஒருவனே காக்க காக்க


ஒருவனே காக்க காக்க

ஒருவார்த்தை போற்றி னாலே
        உளங்குளிந் தருளும் தேவா
கருவார்த்தைக் குள்விதைத்த
        கவிதையை நல்குகின்றாய்
தருவார்த்தை எதுவா னாலும்
        சட்டென உளம் உணர்ந்தே
அருள்தந்தே காக்கும் தேவா
        அண்ணலே வீர பத்ரா!

உன்பகை கொண்ட பேர்கள்
        உயர்ந்தவர் ஆன போதும்
உன்னெதிர் நிற்கும் ஆற்றல்
        உடையவர் அல்லர், நானும்
உன்னரும் பாதம் பற்றும்
        உன்னதம் கண்ட தேவர்
என்னையும் கவர்ந்து போற்ற
         இறங்கியே வருகின்றார்கள்.

ஈரமாய் அன்பும் , அன்பால்
       எழுந்தருள் பரிவும், உண்மை
வீரமாய்த் திறலும் என்ன
    வித்தகத் திரி சூலத்தில்
தீரமாய் அமர்ந்திருக்கும்
        தேவனே , தென்னிலந்தை
ஊரிலே வீற்றிருக்கும்
      ஒருவனே காக்க வேண்டும்

என்றனின் குடும்பம் தன்னில்
        எல்லோரும் நலமாய்த் தேகம்
உன்னத ஆரோக் யத்தில்
        உற்றிட அருள்வாய் தேவா
கன்றுகள்  பால்கு  டிக்கக்
        காத்திருக் கின்றதைப்போல்
உன்னிடம் காத்திருப்போம்
       ஒருவனே காக்க , காக்க!


No comments:

Post a Comment