ஸ்ரீ வீரபத்ரர் உபச்சாரம்
தூபம்
அறுசீர்க் கண்ணி
தூய னான வீரனே
தூபம் இங்குக் காட்டினோம்
நேய மாக யாவரும்
நீடு வாழ வாழ்த்துவாய்
தீபம்
அறுசீர்க் கண்ணி
களங்கண்ட வெற்றிக்
கதிரோனே
கனிவோடு காக்கும் பெரியோனே
உளங்கொண்டு தீப வழிபாடு
உனைப்போற்றிச் செய்தோம் அருள்வாயே!
நைவேத்தியம்
அறுசீர் விருத்தம்
எடுக்கும் வெற்றி
இயல்வீரா
எங்கள் தேவா, இனியோனே
கொடுக்கும் உனக்கிங்
கெதைநாங்கள்
கொடுக்க இயலும் அதனாலே
அடுக்கும் அன்பால், நிவேதனமாய்
அளிக்க்கும் இதனை ஏற்றிடுக
தடைகள் நீக்கி
வளமெல்லாம்
தழைக்க ஐயா அருள்வாயே!
கதலி, தேங்காய், பாயசம்
கரும்பு,
வெல்லம் பானகம்
விதமாய் நல்ல கனிவகை
விரும்பிக் கொண்டு வைத்துளோம்
எதையும் அன்பாய்க்
கொடுக்கையில்
ஏற்றுக் கொள்ளும் தெய்வமே
இதமாய் ஏற்றே எங்களை
என்றும் காக்க வேண்டுமே!
கற்பூர ஆரத்தி
திருப்புகழ்ச் சந்தம்
வேத ருத்திர மூர்த்தி
நமோநம
வேகம் வந்தருள் வீரா நமோ நம
வீர பத்திர ஸ்வாமீ நமோநம - வெகுவாக
பாத நர்த்தன நாதா நமோநம
பாத கம் கடி தீரா நமோ நமோ
பாய்ந்தருள் தரு லீலா நமோநம- பலகாலும்
போதந் தந்திடும் சீலா
நமோநம
பூசுரர் தொழும் பாதா நமோ நம
பூரணந் திகழ் போதா நமோநம அலைமோதும்
தீத கற்றிடும் தேவா
நமோநம
தீப மங்கள ஜோதி நமோ நம
தேவ நின்பதம் மாறா துலாவர அருள்தாராய்!
ஊஞ்சல்
ஊஞ்சலிது ஊஞ்சலிது
ஒய்யார ஊஞ்சல்
உற்சாகமாய் நாங்கள் ஆட்டுகிற ஊஞ்சல்
வாஞ்சையுடன் அமைத்துள்ள
வடிவழகு ஊஞ்சல்
வானிறங்கி மண்ணுக்கு வந்துள்ள ஊஞ்சல் - ஊஞ்சலிது
தெற்கிலந்தைக்
குளம்வாழும் ஸ்ரீ வீர பத்ரா
தெய்வதமே அற்புதனே, ஆடீரோ
ஊசல்
பொற்பதங்கள்
பணிகின்றோம் , பூரணனே ஐயா
பொன்னூஞ்சல் மீதமர்ந்தே ஆடீரோ ஊசல்-
கற்பனைக்குள் எட்டாத
காருண்ய மூர்த்தி
கண்ணியமே வந்திங்கே ஆடீரோ ஊசல்
அற்புதமாய் நாங்களெலாம்
ஆனந்தம் கொள்ள
அகோரவீர பத்திரரே ஆடீரோ ஊசல் - ஊஞ்சலிது
போரிட்ட பாதங்கள்
இளைப்பாறிக் கொள்ள
புண்ணியனே, இங்கமர்ந்தே
ஆடீரோ ஊசல்
யாரிட்டார் என்றுமயன்
அதிசயிக்கும் வண்ணம்
அமைந்திட்ட ஊஞ்சலிலே ஆடீரோ ஊசல் -
சீரிட்டுப் பேரிட்டுச்
சிறப்பாகப் போற்றி
சிந்தைமகிழ்ந் தழைக்கின்றோம் ஆடீரோ ஊசல்
தாரிட்டே ஆபரணம்
தானணிந்து கொண்டு
சந்தோஷ மாயமர்ந்தே ஆடீரோ ஊசல்!- ஊஞ்சலிது
கவரி வீசுதல்
அறுசீர் விருத்தம்
காற்றே வாவா கவரிக்குள்ளே
கனிவாய் அமர்ந்து நீவீசு
ஆற்றல் வீர
பத்திரன்மேல்
அருமைத் தென்ற லாய்வீசு
சீற்றம் தணிய நீவீசு
சிந்தை குளிர நீவீசு
போற்று கின்றோம் நீவீசு
புனிதக் காற்றே நீவீசு
No comments:
Post a Comment