Friday, May 10, 2019

வீரபத்ரர் இரட்டைமணிச் சிந்து


(10-7-2016) எனது கிராமத்தில் எங்கள் குலதெய்வம் வீரபத்ரர் கோயிலில்
கும்பாபிஷேகம்.

சமநிலைச் சிந்தும் ஆனந்தக் களிப்பும் மாறி மாறி வரும். இந்த இரட்டை மணிச் சிந்தில் 
ஒருசீரிரட்டை, இருசீரிரட்டை எனப் படிப்படியாக ஏற்றிக்கொண்டுபோய் பதின்சீர் இரட்டை வரை எழுதியுள்ளேன்.  நண்பர் பேராசிரியர் பசுபதி பதினொரு சீர் சமநிலையும் எழுதினால் ஏகதச ருத்ரர் போலிருக்குமே என்று எழுதியதனால் வாழ்த்தாகப் பதினொரு சீர் சமநிலைச் சிந்தும் எழுதியுள்ளேன்..


தெற்கிலந்தைக் குளம் ஸ்ரீ வீரபத்ரர் இரட்டை மணிச் சிந்து மாலை

காப்பு.

சிந்தில் இரட்டை மணிமாலை வீரபத்ரர்
சிந்தை யிருக்கவிங்கே செப்புகின்றேன் - சந்தமுடன்
நன்கு நிறைவேற நாதா கணபதியே
உன்கருணை வேண்டும் உடன்.
நூல்

சமநிலைச் சிந்து - ஒரு சீரிரட்டை

ஒருயாகம்- தனை
உலைத்தவனே
பெருமானே- அளி
பேரருளே!                                                                                                                                                                                             1
ஆனந்தக் களிப்பு

பேரருள் நீநல்கும் போது - நன்றாய்ப்
  பேணிப் புரக்க அதுவொன்றே தோது
நேரத் துயரே தப்போது? - நெஞ்சில்
   நீநின்றே காத்திட வேறுண்டோ வாது?                                                                                                                                 2
சமநிலைச் சிந்து  இருசீர் இரட்டை

வாதுகள் செய்தவரை - அவி
   மாறியே பெய்தவரை
சேதப் படுத்தினைநீ - மகத்
   தீனி கொடுத்தனைநீ                                                                                                                                                                  3
ஆனந்தக் களிப்பு

நீதி புரந்திடும் தேவா - உனை
   நெஞ்சாரப் போற்றிட நேசன் என் நாவா
ஏது நமக்குள்ளே தாவா” - நன்றாய்
   என்னநான் கேட்பினும் நீயுடன் தாவா!                                                                                                                           4
சமநிலைச் சிந்து முச்சீரிரட்டை

வாகை யின்றி வேறு - உன்பால்
   வந்த துண்டோ கூறு!
யாகம் வந்த தேவர் -அங்கே
   ஆனார் தாறு மாறு                                                                                                                                                                   5
ஆனந்தக் களிப்பு

மாறுகால் மாறுகை போக - அன்று
    மாமகம் வந்த பலருமே சாக
வீறிட்டலறினர் தேவர் - எங்கள்
    வீரபத் ரன்முன்னே நிற்பவர் யாவர்?                                                                                                                               6
சமநிலைச் சிந்து நாற்சீரிரட்டை

யாவரினும் வல்லவன்காண் வீர் பத்திரன் - எமை
    ஆதரித்துக் காக்கிறவன் வீர பத்திரன்
காவல்தெய்வம் ஆகிறவன் வீர பத்திரன் - சிறு
    காணிக்கைக்கும் அருள்கிறவன் வீர பத்திரன்                                                                                                           7
ஆனந்தக் களிப்பு

வீர பத்ரன் குல தெய்வம் - பதம்
   வீழ்ந்து வணங்கியே போற்றுதல் செய்வம்
காரண காரியம் எல்லாம் - இங்கே
   கைகட்டச் செய்திடும் ஐயன் ஓர் சொல்லாம்                                         
         8
சமநிலைச் சிந்து ஐஞ்சீரிரட்டை

சொல்லிலே சுவைப்ப தென்ன எங்கள் குலதேவா - இங்கே
   தோன்றியே நிலைப்ப தென்ன எங்கள் குலதேவா
புல்லிலே பசுமை யென்ன எங்கள் குலதேவா - பொருள்
   போதமே போற்று கின்றோம் எங்கள் குலதேவா?                                                                                                                                                                                                                                                                                                                                                            9
ஆனந்தக் களிப்பு

தேவா சிவன் சடை வந்தாய் - நாங்கள்
    செய்யும் பிழையும் பொறுத்தாய் உவந்தாய்
காவாவா என்றிடும் முன்னே - எமைக்
    காத்திட வந்திடும் நல்லருள் என்னே!                                                                                                                                10
சமநிலைச் சிந்து அறுசீரிரட்டை

என்னே என்னே என்றே ஏங்கி நின்றேன் அன்று - நீயும்
   இந்தா இந்தா என்றாய் என்முன் வந்து நின்று
என்ன சொல்வேன் ஐயா நானும் உன்றன்  கன்று - நான்
   என்ன செய்த போதும் ஏந்திக் காப்பாய் நன்று                                                                                                                11
ஆனந்தக் களிப்பு

நன்றிது தீதிது பேதம் - தனை
     நானறியச் செயும் உன்னருட் போதம்
என்றழைப் பென்றறி யேன்நான்  - நீ
     இன்னருள் செய்கையில் இப்புவி யேவான்.                                                                                                                      12
சமநிலைச் சிந்து எழுசீரிரட்டை

வானமும் காற்றும் வளைவழி புனலும்
வளர்ந்திடு கனலும் நிலமும்- உன்னை
       வழிபடும் நின்றன் வழிபடும் வையம்
       வரன்வழி பெருகும் பலமும்
தானெதிர் நின்ற தனிநர சிம்மம்
       தளர்வறு நிலையும் ஒடுங்க- அங்கே
       தானொரு சரப மூர்த்தியாய் வந்தாய்
       தரணியும் வானும் நடுங்க!                                                                                                                                                     13
ஆனந்தக் களிப்பு

நடுங்கும் நிலையென்ன என்றே - அன்று
   நன்கு குருதியின் உள்ளும்தான் சென்றே
முடங்கிய தேவர் அறிந்தார் - அவர்
   மூர்க்கம் அடங்கிட உள்ளம் முறிந்தார்                                                                                                                    14
சமநிலைச் சிந்து எண்சீரிரட்டை

உள்ளம் முறிந்தநிலை தங்கமே தங்கம்
  உலகம் அறிந்ததடி தங்கமே தங்கம் - கொண்ட
  எள்ளல் சகிக்கவில்லை தங்கமே தங்கம்
  இரவியும் பல்லிழந்தான் தங்கமே தங்கம்                                             
வள்ளல் சிவபெருமான் தங்கமே தங்கம்
  மாண்பை உணர்ந்து கொண்டார் தங்கமே தங்கம் - அன்று
  விள்ளற் கரியநிலை தங்கமே தங்கம்
  வீரன் விளைத்தனன்காண் தங்கமே தங்கம்      
15
ஆனந்தக் களிப்பு

தங்கம் நிகர்த்த பொன் தேகம் - சிவன்
    தந்தகார் வீரன் அழித்தனன் யாகம்
கங்குல் நிகர் பத்ர காளி - துணை
 காட்டி அழித்திட ஆடின கூளி                                                                                                                                        16
ஒன்பதுசீர்  இரட்டைச் சமநிலைச் சிந்து

கூளி கோட்டான்களும் கொள்ளிவாய்ப் பேயும்பூ தங்களும்
குத்துக்குத் தாட்டங்கள் போட்டங்கே ஆடின - அங்கே
கொஞ்சமா நஞ்சமா தின்றுக ளித்திடக்
கொட்டுமி ரத்தம்கு டித்திட வேகமாய்க் கூடின
காளியும் வீரனும் காலம் நடுங்கிடக்
காட்டிய வீரத்தைக் கண்டவை அஞ்சிக் கண் மூடின- அங்கே
கக்கக்க என்றே கலித்துக் கதறியே
காளியின் கூடவே வந்தபெண் பூதங்கள் ஓடின!                 
17
ஆனந்தக் களிப்பு.

ஓடிடும் காலமும் இங்கே - ஐயா
   உன்பெயர் கூறியே ஊதுவேன் சங்கே
தேடரும் ஞானத்தை நானும் - என்றன்
   தெய்வத்தை விட்டினித் தேடுவேன் எங்கே!                                                                                                          18
பதின்சீர் இரட்டைச் சமநிலைச் சிந்து

எங்கே என்றே தேடிட வேண்டாம் இருக்கின்றான் 
      இங்கே தெற்கி லந்தைக் கு ளத்தில் எம்வீரன் - முன்னர்
எங்கள் முன்னோர் இவ்விடம் வாவென் றியம்பியதால்
     இங்கே வந்தான் எங்குல தேவாய் இருக்கின்றான்
எங்கும் உள்ளான் இவ்விடத் தும் வந் தாளுகிறான்
     இங்கே தெய்வம் பற்பல உண்டு பரிவாரம் - இவன்
 சங்க டங்கள் தான்சில போது தரும்போதும்
     தாங்கிக் காக்கும் தண்ணளி மிக்கான்  தயவுள்ளான்        
19
ஆனந்தக் களிப்பு

மிக்கத் தயவுள்ள வீரன் - பகை
   வீட்டுவான் நல்லருள் காட்டுவான் தீரன்
எக்கணத்தும் எங்கள் யோகம் - எம்
   எச்சிறு வேண்டலும் பார் ஒரு யாகம்!                                                                                                                     20
வாழ்த்து

வார்த்த பாடல் தன்னிலே வந்து நிற்கும் வீரனும்
 வாரி வாரி வாரிச் செல்வம் கொட்டுவான் - அவன்
வானம் விட்டு மண்ணிலே மக்க  ளோடு மக்களாய்
வந்து நின்று பக்தி நெஞ்சில் ஒட்டுவான்

ஆர்த்தெ ழுந்த வெஞ்சினம் யாகத் தோடு போனது
யாவ ருள்ளும் அன்பு காணத் தட்டுவான் - அவன்
அன்புத் தேவி தன்னுடன் ஆத ரிக்கும் நல்லவன்
அக்கம் பக்கம் பார்க்க அங்கே கிட்டுவான்


நூற்பயன்

வார்த்த இரட்டை மணிமாலைச் சிந்தினைப்
பார்த்தாலே கூடப் பலனுண்டு-  நேர்த்தியாய்
ஊன்றிப் படிக்கையிலே உள்ளபயன் எத்தனையோ?
தோன்றுவ தெல்லாம் சுகம்!

No comments:

Post a Comment