வேண்டல் பஞ்சகம்
கல்விச் சிறப்பும் களங்கமிலா
நன்னெஞ்சும்
சொல்லில் மிகத்தெளிவும்
தூய்மையும்- நல்வாழ்வும்
சான்றோன் எனப்புகழும் சார்ந்துவர
வீரபத்ரத்
தோன்றலே செய்வாய் துணை.
மாறுபட்ட தட்சன் மமதை ஒழித்துசிரம்
வேறுபட்டுப் போக விளைத்தவனே- நீறுபட்டுப்
போகுமுனம் எல்லாப் புகழும்
அளித்தருள்வாய்
யோகத்(து) உனைக்காண் உயர்வு.
இன்னும்நான் செய்வதற்கு
எத்தனையோ உள்ளதய்யா?
உன்னையன்றி யாரே உதவிடுவார்- என்றன்குல
தெய்வதமே, நீள் ஆயுள், தேகநலம்,
நல்லறிவு
பெய்திடுவாய் இன்னும் பெரிது.
ஏது நலமென்று எனக்குத் தெரியாது
தோதருள்வாய் நீயே சுகமாக- பாதகங்கள்
போக்கி நலங்கள்
புதிது புதிதாக
ஆக்கம் அனைத்தும் அருள்.
என்னிடத்தில் உள்ளபரி(சு) என்னவென நானறியேன்
உன்னிடத்தில் என்றன் உளம்வைத்தேன் - பொன்னிடத்தில்
பூவைத்தேன் வேறு புகலறியேன், தந்தருள்வாய்
தேவைகள் எல்லாம் தெரிந்து.
No comments:
Post a Comment