ஐயப்பன் சிந்து என்ற எனது நூல் ஐயப்பனுடைய வறலாற்றையும் தத்துவத்தையும் சொல்லும் வழிநடைச் சிந்து.
ஐயப்பன் சிந்து
ஆரம்பம் செய்யுமுன் அங்குவந்து காப்பாற்றும்
ஈரமுள்ள ஐங்கரனே, என்னிறையே- சாரமிக்க
ஐயப்பன் சிந்தை அடியேனும் பாடுதற்கு
செய்யப்பா மேலும் சிறப்பு.
நூல்
சாமி சரணமைய் யப்பா- ஐயன்
தாள்மலர் நாளும் நீ நெஞ்சில் வையப்பா
நாமம் iஇதற்கிணை ஏது?-iஇதில்
நம்பிக்கை வைத்தால் விலகிடும் தீது.(சாமி)
திரைகடல் மோதிடும் நாடு- மலை
திக்கை வளைக்கும் மலையாள நாடு
பரசுரா மர்தந்த நாடு-அதில்
பந்தளம் என்னும் ஒருசிறு நாடு
பந்தள நாட்டுக்கு வேந்தன்-சிவ
பக்தி கனிந்து விளங்கிய காந்தன்
முந்தையோர் தம்நெறி பற்றி- நீதி
முறையிலே ஆண்டனன், எங்கணும் வெற்றி!
கள்ளம் iஇலாதநல் நெஞ்சம்-கொண்ட
காவலன் நாட்டிலே செல்வங்கள் கொஞ்சும்
பிள்ளை iஇலாக்குறை ஒன்றே-மிகப்
பிய்த்தது மன்னவன் நெஞ்சினில் நின்றே
காமக் குரோதமே போக்கி -சிவ
காமமே நெஞ்சில் கனிந்திடத் தேக்கி
சாமியை வேண்டித் தொழுதான்-ஒரு
சந்ததி வேண்டிக் கதறி அழுதான்.(சாமி)
மன்னன் கவலையைப் போக்க-சிவன்
மாயன் எடுத்தநல் மோஹினி நோக்க
மின்னல் தெறித்தொளி சேர்க்க-ஒரு
விந்தைக் குழந்தை பிறந்தது காக்க.
சின்னக் குழந்தையைப் பார்த்து-ஒளி
சேர்க்கும் மணியைக் கழுத்தினில் கோத்து
மன்னன் வரும்பாதை ஓரம்- காட்டில்
வைத்து மறைந்தனர் தாம்வெகு தூரம்.
காட்டுக்கு மன்னவன் வந்தான்-அங்கே
கண்ணைப் பறிக்கும் ஒளிகண் டுவந்தான்
நாட்டுக்குச் சந்ததி கண்டான்-சிவ
நாதன்தன் பாதம் சிரமிசைக் கொண்டான்.(சாமி)
பிள்ளையைப் பேணி வளர்த்தான்-அந்தப்
பிள்ளையின் லீலைகள் கண்டு களித்தான்
கொள்ளை வளம்சேர லாச்சு -நாட்டில்
கோலாகல மன்றி வேறில்லை யாச்சு.
அரசிக்கோர் பையன் பிறந்தான்- ஐயன்
அண்ணனாய்த் தம்பிமேல் அன்பிற் சிறந்தான்
அரண்மனை எங்கும் கொண்டாட்டம்-அந்த
அரசனுக் கெப்போதும் ஐயன்மேல் நாட்டம்
நல்ல குருவிடம் சேர்த்தான்-கல்வி
நாடி மணிகண்டன் கற்பதைப் பார்த்தான்
சொல்லாமல் யாவும் புரியும்-அவன்
சொல்வதில் ஏதேதோ அர்த்தம் விரியும்.
குருவுக்கு யாதுகா ணிக்கை- அவன்
குழந்தையாம் ஊமைக்குத் தந்தனன் வாக்கை.
பரிவின் உருவமாய் வாழ்ந்தான்-அந்தப்
பரமனின் பிள்ளை பணிவுக்குத் தாழ்ந்தான்.(சாமி)
உள்ளத்தில் எங்கும் நமைச்சல் -கொண்டு
ஊறு விளைக்கத் துடித்தான் அமைச்சன்
கள்ளம் அவன் விடும் மூச்சு-அவன்
கண்களில் எப்போதும் தீமையின் வீச்சு.
ஐயன் வயதோர் ஈராறு-யிந்த
ஆட்சியைத் தந்து விடுவதே பேறு
செய்யும் செயலிது வென்றே-அந்தத்
தேசத்து மன்னன் நினைத்தனன் நன்றே
அமைச்சன் உளத்தில் கொதித்தான்-அந்த
அரசியின் நெஞ்சிலே நஞ்சை விதைத்தான்
அமைதி குலைத்திட வேண்டி-அந்த
அம்மையின் உள்ளம் கலைத்தனன் தூண்டி.
எங்கோ கிடந்தவோர் பிள்ளை-அரசு
ஏற்றிட நாடதும் போகுதே கொள்ளை
தங்கள் பையன் என்ன ஆவான்- iஇங்கே
தாங்கள் iஇருந்தும் அடிமையாய்ப் போவான்
என்றந்த மந்திரி சொல்ல-உள்ளத்து
ஏற்றிய வார்த்தைகள் நஞ்செனக் கொல்ல
'iஇன்றே அதனைத் தடுப்பேன்-என்றன்
iஇராஜராஜன் கையில் ஆட்சி கொடுப்பேன்
மந்திரி உன்றனைப் போலே-நல்ல
மதியுடையார் இல்லை iஇந்த மண்மேலே
தந்திரம் நீசொல்க என்றாள்-அந்த
சண்டாளன் சொன்னதைத் தான்கேட்டு நின்றாள்
தலைவலி என்றே துடித்தாள்-அவன்
சாற்றிய வண்ணமே ராணி நடித்தாள்
புலிப்பால் மருந்தாகும் வேறு-ஏது
போட்டாலும் தீராது பொல்லாத ஊறு
என்று மருத்துவர் சொல்ல-ராணி
ஏற்ற தலைவலி மேன்மேலும் கொல்ல
மன்னவன் நெஞ்சம் பதைத்தான்-தெய்வ
மலரடி போற்றி மனத்துள் துதித்தான்
பந்தளத் தில்பாதிப் பாகம்-புலிப்
பாலைக் கொணர்ந்திடில் நல்கிட லாகும்
தந்தனன் வாக்கினை என்றே-மன்னன்
சாற்றப் பறந்தது செய்தியும் அன்றே!
புலிப்பால் கொணர்ந்திடப் போவார்-காட்டுப்
பொல்லாப் புலிக்கு விருந்தாகிச் சாவார்
மலைப்பாலே போவோரும் iஇல்லை-அந்த
மாயம்செய் ராணியால் மேன்மேலும் தொல்லை.
ஐயன் மணிகண்டன் வந்தான்-அந்த
அரசனின் காலில் விழுந்து பணிந்தான்
மெய்யுற வாரி யணைத்து -அந்த
வேந்தனும் மைந்தனை உச்சி முகர்ந்தான்
"மன்னா வரம் ஒன்று வேண்டும்"-என்ற
மைந்தனின் வார்த்தைகள் ஆவலைத் தூண்டும்
"என்ன வரம் வேண்டும் சொல்வாய்"-iஇதோ
iஇப்பொழுதே தந்தேன் சத்தியம் வெல்வாய்"
என்றந்த மன்னவன் சொல்ல-ஐயன்
ஏற்றிய புன்னகை நெஞ்சத்தை வெல்ல
மன்னன் மகிழ்வுற்று நின்றான்-ஐயன்
"வனத்திடைச் சென்று வருவேன்நான்"என்றான்
பட்டுப் படபடீர் என்றே-iஇந்தப்
பாரில் அனைத்தும் வெடித்திட லாச்சு
முட்டிற்று மோதிற்று வானம்- அந்த
மோதல் iஇடிப்பில் பிளந்தது கானம்
வெள்ளம் விரைந்திட லாச்சு-மாரி
வீறிட வீதிகள் ஆறிட லாச்சு
பள்ளங்கள் மேடுற லாச்சு-அந்தப்
பந்தள ராஜா தனை மறந்தாச்சு.
ஐயப்பன் சிந்தின் தொடர்ச்சி.
மன்னன் மயங்கி விழுந்தான்.- பின்னர்
மயக்கம் தெளிந்து வருந்தி எழுந்தான்
"என்மக னேமணி கண்டா- நீ
ஏகினால் ஆவி தரிப்பதும் உண்டா?
காட்டில் கடும்புலி உண்டு-தீய
கரடி சிறுத்தையும் சிங்கமும் உண்டு
மாட்டேன் அனுப்பிட மாட்டேன்"-என்று
வருந்தி பலப்பல சொன்னனன் மன்னன் (சாமி)
"சத்தியம் செய்ததன் பின்னே- இன்னும்
சங்கடப் பட்டு வருந்துதல் என்னே?
உத்தரவு வேண்டும் அப்பா- நான்
ஒன்றும் அறியாதான் என்ற நினைப்பா?"
மைந்தனும் இவ்வாறு சொல்ல-அந்த
மன்னவன் நெஞ்சைப் பிளந்திடர் கொல்ல
தந்தனன் இவ்வரம் என்றே-சொல்லிச்
சத்தியம் காத்தனன் மன்னவன் நன்றே!
வேறு துணையேதும் இன்றி- இங்கே
மேவித் தொடர்ந்த நினைப்பிலே ஒன்றி
வீறு நடைபோட்டான் ஐயன்-தீ
வினையெலாம் போக்க விரைந்திடும் மெய்யன்(சாமி)
ஐயன் வரவினைக் கண்டு -தேவர்
ஆறுதல் பெற்றார் களிமிகக் கொண்டு
உய்யும் வழிகண்டோம் என்றே- விரைந்து
ஓடோடி வந்தனர் காட்டிடை அன்றே!
கண்டவர் அஞ்சியே ஓட-அந்தக்
காட்டில் மகிஷி தலைவிரித் தாட
திண்தோள் மணிகண்டன் பார்த்தான்-அந்தத்
தீய மகிஷியின் கொம்பில்கை சேர்த்தான்.
கொம்பை அழுத்திப் பிடித்தான்- முன்
குதித்துக் கூத்தாடிய காலை ஒடித்தான்
கொம்பை விடாப் பிடியாலே-அவள்
கொட்டம் ஒடுங்கி விழுந்தாள்மண் மேலே
குன்றாய்த் தரையில் கிடந்தாள்-அந்தக்
கோலத்தில் முன்வினைப் பாவம் கடந்தாள்
குன்றை அழுந்த மிதித்தான்- அதில்
கூத்தாடிக் கூத்தாடி ஐயன் குதித்தான்(சாமி)
தான தனதன தத்தோம்-தன
தந்தன தான தனன தனத்தோம்
கானம் இசைத்தனர் தேவர்-அதைக்
கண்டு களித்தனன் நண்பனாம் வாவர்
சாப விமோசனம் பெற்று-உடன்
சரணமென் றையனின் தாளிணை யுற்று
தாபம் தகித்திட நின்றாள்-"ஐயா
சாமி எனை மணம் கொள்ளுக" என்றாள்.
"பெண்ணேநான் இவ்வவ தாரம் -தன்னில்
பிரம்மச்சர் யம்காப்பேன் கொண்டிடேன் தாரம்
மண்ணில் சில செயல் உண்டு-பின்
வருவேன்நான் இவ்விடம் கோயிலைக் கொண்டு"
என்று மணிகண்டன் சொல்ல-உள்ளே
ஏறிய தாபம் அவள்நெஞ்சைக் கொல்ல
என்ன வழியெனக் கென்றே-கேட்ட
ஏந்திழைக்கோர் வழி செய்தனன் அன்றே!
கன்னி ஐயப்பன்மார் யாரும்-எனைக்
காணவாரா ஆண்டில் நின் குறை தீரும்
என்னை வணங்க வருவார் - இனி
உன்னையும் போற்றியுன் ஆசி பெறுவார்"
என்றான் மணிகண்டன் அய்யன் - நம்
இன்னலைப் போக்க எழுந்திட்ட மெய்யன்
வென்றவன் தன்புகழ் பாடி-மேலே
விண்ணவர் ஆர்த்தனர் ஓடினர் ஆடி.
வந்தனம் வந்தனம் என்றே- அந்த
வானோர் புலிகளாய் மாறினர் நன்றே!
இந்திரன் தாய்ப்புலி யானான்- அதில்
ஏறிக்கொண் டையனும் நாட்டிடைப் போனான்(சாமி)
கொல்லும் புலியதன் மீது- ஐயன்
கோலாகலமாக வந்திடும் போது
பொல்லாத மந்திரி பார்த்தான் - அவன்
புத்தி தடுமாறித் தன் உளம் வேர்த்தான்.
தலைவலி போய்விட்ட தென்று-ராணி
சத்தியம் செய்தனள் மன்னன்முன் நின்று
வெலவெலத்து வீதி மக்கள்-இந்த
விந்தைச் சவாரியை வேடிக்கை பார்த்தார்.
மன்னவன் ஓடோடி வந்தான்-தன்
மைந்தனின் வீரத்தைக் கண்டான் உவந்தான்
"என்ன தவம் செய்துவிட்டேன்- மைந்தா
என் குல தெய்வமே நீ கண்டுவிட்டேன்"
என்று பலப்பல சொல்லி - இன்னும்
ஏதேதோ சொல்லிப் பிதற்றிடும் போது
சின்னக் குறுமுனி வந்தார்-இந்தத்
தெய்வம் பிறந்த வரலாறு தந்தார்(சாமி)
மன்னவன் காலில் விழுந்தான்- என்னை
மான்னிக்க வேண்டும்நீ என்று தொழுதான்
மன்னவன் தன்னைத் தடுத்து- ஐயன்
"மண்னுலகத் தந்தை வாழ்த்துக" என்றான்
வந்த பணியை முடித்தேன்-சபரி
மலையினில் வாழ முடிவை எடுத்தேன்
எந்த இடர்வந்த போதும்- நாடி
இங்கே வருவோரைக் காப்பேன்எப் போதும்
ஆகமம் கூறிய வண்ணம் -அங்கே
ஆலயம் ஒன்றை எழுப்புக முன்னம்
யோக நிலையிலென் தோற்றம்-என்றான்
ஓங்கும் மலைக்கு மிகுந்ததே ஏற்றம்
ஆலயம் கட்டி முடித்தார்- அதில்
ஐயன் புகுந்துநற் காட்சி கொடுத்தார்
ஆலயம் நாடியே செல்வார்-அந்த
ஐயன் அருளினால் யாவையும் வெல்வார்.(சா¢)
காமக் குரோதம் விடுத்து-நல்ல
கருப்பு நீலம் காவி அங்கி உடுத்து
நாமம் தினந்தினம் கூவி-கோயில்
நாடுவார் வாழுவார் இன்பமே மேவி
ஒருமுடி சத்தியம் காக்க-பின்னும்
ஒருமுடி சூழ்வினைப் பாசங்கள் நீக்க
இருமுடி தாங்கியே செல்வார்-வாழ்வில்
ஏற்படும் இன்னல்கள் யாவையும் வெல்வார்
ஜாதி மத பேதமில்லை-பதம்
சார்ந்தவர்க் கில்லை வீண் தத்துவத் தொல்லை
நீதி நேர் மைக்கையன் எல்லை-இதை
நெஞ்சிடைக் கொண்டாலே வேறேது தொல்லை?
மூவாறு தத்துவம் கூட்டி-மேலே
முந்தும் படிதாண்டத் தன்னுருக் காட்டி
காவாவா என்றிடும் முன்னே-ஓடிக்
காத்திடும் ஐயனின் நல்லருள் என்னே!
சத்தியமே ஐயன் வேதம்-எழும்
சாமி சரணம் எனுமரும் நாதம்
முத்திரையாய் நமைக் காக்கும்-அந்த
மூலச் சுருதியில் நம்முளம் சேர்க்கும்
ஐந்து புலன்கள் அடக்கி-எழும்
அட்டராகங்களின் கொட்டம் ஒடுக்கி
சிந்தையை நிர்க்குணமாகி-ஐயன்
தெய்வத் திருவில் கலந்திடத் தேக்கி
பெற்றிடும் நல்லருட் பேறு-மாயப்
பித்தந் தெளிந்திடச் செய்திடும் சாறு
கற்றார் கல்லாதவர் யாரும்-ஐயன்
காலடி பற்றக் கவலைகள் தீரும்
காந்த மலைப் பெருஞ்ஜோதி-ஐயன்
காட்டிய வாழ்க்கையே மாபெரும் நீதி
மாந்தருக்குள் வந்த தெய்வம்-அடி
வாழ்த்தி வணங்கிநம் வாழ்க்கையில் உய்வம்
வாழ்க மணிகண்டன் வாழ்க-பதம்
வாழ்த்தி வணங்கும் அடியவர் வாழ்க
சூழ்க நலமெல்லாம் சூழ்க-ஐயன்
ஜோதி அகத்தொளி சேர்த்திடச் சூழ்க!
No comments:
Post a Comment