Friday, May 10, 2019

கந்தன் கவிதை


கந்தன் கவிதை
 எழுசீர் விருத்தம்
நாடியில் நரம்பினில் இரத்த ஓட்டத்தினில்
   நல்லுயிர் உடம்பினோடே
ஊடிடும் முயக்கினில் உறவினில் கொள்கையில்
   ஓடிடும் கால கதியில்
பாடலில் பொருளினில் பழகிடும் தமிழினில்
   பரிவுடன் நின்றருளுவாய்
கூடிடும் அன்பினால் செந்திலில் குடிகொளும்
   குமரனே கந்தவேளே!

ஆடிவரும் உன்நடை அழகினைப் பாடவா
      அருள்புரி நலம் பாடவா?
கூடிவளர் இளமையின் குளுமையைப் பாடவா
      கொஞ்சிடும் மொழி பாடவா?
தேடரும் பொருள்தரும் தெளிவினைப் பாடவா
      செந்தமிழ்த் திறம்பாடவா?
பாடிடும் பொருளெலாம் பரமநீ அல்லவோ?
       பாடலும் நீயல்லவோ?

அழகு- அறுசீர் விருத்தம்

அழகினைப் பேச வேண்டின் ஆயிரம் கவிநா வேண்டும்
செழித்திடும் இளமை பேசும் தேர்ச்சியோ எளியேற் கில்லை
தழைத்திடும் அருளைச் சாற்றத் தமிழிலே வார்த்தை இல்லை
மொழியினால், திறமை தன்னால் முடிந்ததைப் பேசு கின்றேன்

வெண்கலிப்பா

வெள்ளி ஒளிஉமிழ்ந்து விந்தைசெய, கீழ்வானி;ல்
பிள்ளை வெளுப்புப் பிதிர்ந்து வழிகாட்ட
கத்தும் கடலலைகள் தத்தோம் எனவொலித்துப்
புத்தம் புதிய இசை போற்றித் துயிலெழுப்பக்
காலை இளங்கதிர் கண்விழித்து ஓலமிடும்
நீலக் கடலில் நிமிர்ந்தெழும் காட்சியிலும்
கோல நிழலதனில் குஞ்சுக்கு உணவூட்டும்
தாய்ப்பறவை காட்டும் தணியாத அன்பினிலும்
வாய்த்த பகற்பொழுது வாடிவிட அந்திதரும்
செக்கர் புனைகின்ற சித்திரத்தின் நேர்த்தியிலும்
குக்குக்கூ என்றகுயில் பாட்டினிலும் பால்நிலவின்
தண்ணென் குளுமையிலும் சண்முகனே உன்றனையே
கண்முன்னே காண்கின்ற காட்சிகளை என்சொல்வேன்?
எங்கெல்லாம் கூடும் எழில் உண்டோ அங்கெல்லாம்
பொங்கிவரும் நின்னழகின் புத்தொளியே காண்கின்றேன்.

இளமை

அறுசீர் விருத்தம்

அழகினுக் கழிவே இல்லை அழகதும் தேய்வ தில்லை
அழகதன் உருவாய் நிற்கும் ஆண்டவா நீயே என்றும்
செழித்திடும் இளமை என்று  சிந்தனை சொல்லும்., ஆனால்
எழுந்திடும் ஐயம் ஒன்றை எப்படித் தீர்ப்பேன் ஐயா?

ஒருவரைத் துணையாய்க் கூடி ஒருசில நாள்கள் வாழ்ந்தால்
நரைதிரை மூப்புத் தோன்றும் நடப்பிலே கண்ட உண்மை
இருவரைத் துணையாய்க் கொண்டும் ஏதொரு தளர்வும் இன்றிப்
பெருகிடும் இளமை சேரப் பீடுடன் இருப்ப தென்னே!

செந்தமிழ் கன்னி யென்பார், தேய்விலா இளையள் என்பார்
செந்தமிழ்த் தந்தை நீயே, செந்தமிழ்த் தெய்வம் நீயே
முந்திடும் உன்றன் பார்வை  முகிழ்த்திடும் இளமை பெற்றோ
செந்தமிழ் கன்னி யானாள், தேய்விலா இளமை பெற்றாள்!

அருள்

காவடிச்சிந்து

தத்தும் கடலலை முத்தமிட்டே கரை
மோதிடும் அடி கோதிடும்
சத்தம் மனத்திடைத் தத்துவம் பற்பல
ஓதிடும் மனம் வாதிடும்
மொத்தும் அலைகடல் மூண்ட கரையதன்
வாயிலில் அமர் கோயிலில்
எத்தனை காலம் இருந்தெம்மைக் காக்கிறாய்
வேலவா, வடி வேலவா?

தீய மனங்கொண்டு தொல்லை பல தந்த
சூரனை அகங் காரனை-உயிர்
மாயும் படி செய்து மற்றவன் தன்னையும்
வாழ்த்தினாய் துயர் வீழ்த்தினாய்
காயும் உளத்தொடு தீயவை பற்பல
கண்டவன் மிகக் கொண்டவன்எனைத்
தாயெனும் அன்பினால் தாங்கிக் கொண்டால்குறை
சாருமோ மனம் சோருமோ?

தேடும் பொருளென்றே தெய்வமெனச் சிந்தை
ஒன்றியே மனம் குன்றியே- வளம்
கூடும் நிறைவின்றிக் கொள்கைப் பிடிப்பின்றி
ஓடினோம் தினம் வாடினோம்-களி
ஆடி முடிந்தபின் ஓடிக் களைத்தபின்
அன்னையே என உன்னையே- உடன்
தேடிவரும் சிறு பிள்ளை முகத்தினை
நோக்குவாய் அருள் தேக்குவாய்

ஞானகுரு

கலிவெண்பா

கனிகொடுத்த தந்தைமேல் கட்டிற் கடங்கா
முனிவெடுத்தாய், குன்றேறி மோனத் தவம்புரிந்தாய்
ஆண்டியாய் நின்றாய், அடியாரை வாழ்வித்து
வேண்டும் நலந்தரவே மேவுகிறாய் , அன்று
கனிமறுத்த தந்தைக்கும் கந்தனே, ஞானக்
கனிகொடுத்தாய், வேதக் கருவூலம் காட்டுவித்தாய்
வாழ்க்கைச் சமத்துவத்தைக் காட்டக் குறமகளை
வாழ்க்கைத் துணையாய் வரித்தாய்நீ, என்றும்
முயற்சி உடையார்க்கு முந்தியருள் செய்யும்
உயர்வுதனை இந்த உலகிற்குக் காட்டிடவே
குன்றுகளைத் தேடிக் குமரா குடிகொண்டாய்
என்றைக்கும் ஞானிநீ யே!

யாவும் நீ

எழுசீர் விருத்தம்

கண்ணின்ஒளி நீ பசும் புல்லின்நகை நீ உளம் கண்டிடும் காட்சியும் நீ
பண்ணின் இசைநீ வளர் மண்ணின் மணம் நீ வியன் பாரிலே அசைவெலாம் நீ
எண்ணும் பொருள்நீ தயை பண்ணும் அருள்நீ சொலும் எண்ணிக்கை இலாதவன் நீ
தண்ணம் தமிழ் நீ தமிழ் சாரும் ,சுவைநீ கவி தந்திடும் அமிழ்தமும் நீ!


No comments:

Post a Comment