Monday, May 13, 2019

ஸ்ரீ புவனேஸ்வரி பதிகம்


ஸ்ரீ புவனேஸ்வரி பதிகம்

உதிக்கும் கதிர்முகம் ஒண்மதி மேல்முகில் ஒற்றைப்பிறை
பதிக்கும் திலகம் பரிந்திடும் கண்கள் பவளயிதழ்
மதிக்கும் ஒளிமுத்து மாலை இரத்ன வளைவரிசை
குதிக்கும் அழகுக் கொடியிடை ஸ்ரீபுவ னேஸ்வரியே!

அணியாய் இருகரத் தங்குசம் பாசம் அமைந்திருக்கப்
பணிவார்க் கபயம் பரிவுடன் ஓர்கரம் பாலித்திட
மணியாய் நலங்கள் வழங்கியே ஓர்கரம் வரமளிக்கத்
தணியா அருளைத் தருகிறாய் ஸ்ரீபுவ னேஸ்வரியே!

படபட வென்றே பறக்கும் மனிதப் பதட்டத்திலே
தடதட வென்றே தரியாக் கணங்கள் சலித்துவிழும்
கடவு ளருக்கும் கடமை அளித்திடும் கண்மணியே
நடமிதைச் சீராய் நடத்திடு ஸ்ரீபுவ னேஸ்வரியே!,

சித்தமா வித்தைகள் பத்தினுள் நான்காம் திருவருளே
உத்தம மூவரின் உச்சியின் மேலும் உயர்ந்தவளே
இத்தனை இவ்விதம் இவ்விடம் என்றெ இயம்பறியா
மொத்தமே , மூலமே , மோனமே, ஸ்ரீபுவ னேஸ்வரியே!

பேரெழுத் தாய் ஒளிப் பீடெ ழுத்தாய்,  உயிர்ப் பேறளிக்கும்
வேரெழுத் தாய், மறை வீறெழுத் தாய், உளம் வீற்றிருக்கும்
சீரெழுத் தாய், இறை தேரெழுத் தாய், பிணி தீர்த்தருளும்
ஓரெழுத்தாய் நலமோங்கிடும் ஸ்ரீபுவனேஸ்வரியே!

பூத்தாய், புனைந்தாய், புதிதாய் எழுந்தாய், புடைத்தளித்தாய்
கோத்தாய் உயிர்கள் குறித்தாய், நலமாய்க் குதூகலித்தாய்
பார்த்தாய் , பசுமை படைத்தாய், எளிதாய்ப் பரிந்துவந்தாய்
மூத்தாய், அளித்தாய் முறைதரும் ஸ்ரீபுவ னேஸ்வரியே!

தாயே, வெளியாய்த் தரிசனம் நல்கிடும் சத்தியமே
காயே சுமந்தும் கனியென உன்னிடம் காட்டுகிறோம்
சேயே தவறுகள் செய்திடில் தாய்மனம் சீறுவதோ
நீயே கனிச்சுவை நெஞ்சினில் ஸ்ரீபுவ னேஸ்வரியே!

காடும் மலையும் கடலும் மலையும் ககனமெலாம்
கூடும் ஒளியே குளிர்வளி யேஅருள் கோமளமே!
பாடும் இசையில் பரியும் சுவையே, பரிமளமே
தேடும் உளத்தில் திகழ்ந்திடும் ஸ்ரீபுவ னேஸ்வரியே!

இதயக் கொடியே, இதமே பதமே இனியவளே
உதயக் கொழுந்தே உயர்வே பரமே உடையவளே
நிதியே, நிதமே, நிஜமே, நிறைதரு நிம்மதியே,
விதியே விதிக்கும் வினைபுரி ஸ்ரீபுவ னேஸ்வரியே!

யாரா கிலுமுன் அடிமலர் சேர அருள்பெருகும்
வாரா வளமெலாம் வாசலில் வந்து வரமளிக்கும்
ஆரா அமுதே அழகே, அணியே, அருமருந்தே
தீரா வினைகெடச் செய்திடும் ஸ்ரீபுவ னேஸ்வரியே!


No comments:

Post a Comment