Saturday, May 11, 2019

இறைவன் நல்வரம்


வாழ்க்கை இறைவன் நல்வரம்

நடந்த தெல்லாம் அவன்பரம்
       நடப்ப தெல்லாம் அவன்பரம்
நடக்கப் போவ தவன்பரம்
       நம்பிக்கைதான் நின்பரம்
கடந்த தெண்ணி நோவதேன்?
       கடப்ப தெண்ணித் தேய்வதேன்?
திடந்தான் என்றும் முக்கியம்
       தெய்வம் நெஞ்சில் ஐக்கியம்.

உயரே உயர ஓர்வழி
       உண்மை யான நேர்வழி
அயர வைக்கும் எதனையும்
       அயர வைக்கச் சேர்வழி
முயற்சி கொண்டு பக்தியில்
       மூழ்கும் தெய்வச் சீர்வழி
பயிற்சி தேவை இல்லையே
       பக்தி யேதான் எல்லையே!

மாசு பொய்மை சூதுகள்
       மயங்க வைக்கும் வாதுகள்
நீசம் வஞ்சம் வெஞ்சினம்
       நேர்மை யற்ற நெறிமுறை
ஏசல் , பூசல் யாவையும்
       எளிய பக்திக் கெதிரிகள்
நேசம் ஆளும் பக்தனின்
       நெஞ்சில் என்றும் நிம்மதி!

எல்லாம் அந்த இறைவனின்
       எண்ணப் படிதான் என்பவன்
பொல்லா எதுவும் சேர்கையில்
       புத்தி மாறிப் போவனோ?
நில்லா திருக்கும் உலகிலே
       நிற்க வைக்கும் பக்தியில்
வல்லார் கொள்வர் நெஞ்சுரம்
       வாழ்க்கை இறைவன் நல்வரம்.

No comments:

Post a Comment