என்ன செய்வேன்?
முற்றாகத் தெளிந்துவிட்டோம் எனும்நி¢ னைப்பில்
மூக்குளித்துக் கயிலையின்முன் நிற்கும் போதில்
வெற்றாகக் கழித்தவைகள் விழுந்து போக
மேலோடிப் போனவைகள் ஓரெ ழுத்தின்
ஒற்றாகக் கூட இல்லை என்னும் எண்ணம்
உளத்தில்வரும், அனுபவத்தில் கண்ட உண்மை
கற்றாழை கூடவொரு மருந்தாய் ஆகும்.
கண்டதென்ன கொண்டதென்ன தெரிய வில்லை.
குப்பைகளைச் சுமக்கின்றேன், எங்கோ சென்று
கொட்டி விட்டு மீண்டுமங்கே குப்பை சேர்ப்பேன்
தப்படியே போட்டுவிட்டுத் தவிக்கும் போதில்
தாளடியைக் கண்டு விட்டால் அடடா, அந்த
ஒப்படியே இல்லாத ஒன்றுக் குள்ளே
உள்ளடங்கிப் போய்விடலாம், ஆமாம், அந்தக்
கொப்பிடையே தாவுகிற குரங்கு கூட
குறிதப்பி வீழ்வதில்லை, நான் வீழ்கின்றேன்
சிந்தையிலே கோளாறா, ஏற்றுச் செய்யும்
செய்கையிலே கோளாறா , கூட்டிச் செல்லும்
மந்தையிலே கோளாறா, படித்து விட்ட
வரிசையிலே கோளாறா, இந்த வாழ்க்கைச்
சந்தையிலே கோளாறா? நினைத்துக் கொள்ளும்
தகுதியிலே கோளாறா? நான்ப டைக்கும்
பந்தியிலே கோளாறா, வேண்டிக் கொள்ளும்
பக்தியிலே கோளாறா? தெரியவில்லை
நின்றிருக்கும் தென்னைமரம் என்னைப் பார்த்து
நெளிந்தபடி சிரிக்கிறது, வெப்பம் தூக்கிச்
சென்றலையும் காற்றதுவோ என்னைச் சற்றே
திணறவைத்துப் பார்க்கிறது, தேடித் தேடி
அன்றலைந்தேன் , இன்றைக்கும் அலைகின்றேன் நான்
அலைந்துகொண்டே இருப்பதுதான் விதியோ, அய்யா,
ஒன்றினிலே ஒன்றாக உள்ள ஒன்றே
உன்களியின் ஆடுகளம் எனக்குள் தானோ?
ஆட்டத்தைக் கேட்கின்றேன், நாதம் தாளம்
அங்கிசைக்கப் பார்க்கின்றேன், லப்டப் லப்டப்.
ஓட்டத்தால் ஓடுகிறேன், உள்ளுக் குள்ளே
ஒருகோடி கோடி உன்றன் கூட ஆடும்
கூட்டத்தின் தொகுதியினை உள்ள டக்கும்
கூடாநான்? நீயிருக்கும் கோயில் தானா?
ஓட்டத்தில் செல்லுகின்ற என்னை யாரோ
ஒடுக்கத்தில் பாரென்பார் , என்ன செய்வேன்?
இலந்தை
19-10-2006 மாலை 5-15
No comments:
Post a Comment