நான்விட்டேன் என்றால் என்?
கட்டளைக் கலித்துறை
நான்விட்டேன் என்றால் என்? நாமகள் நீயும் நழுவுவதோ?
ஏன்விட்டாய் என்றே எனைத்தட்டிக்
கேட்கும் இதம்விடுத்தே
தான்விட்டால் எங்ஙன் தரிப்பேன்? என்
நாவில் தயவுடனே
தேன்விட்டுப் பாய்ச்சிடு, செந்தமிழ் உத்திகள் சித்திக்கவே!
சித்திநீ, புத்திநீ, தேர்கலை வாணிநீ,
சித்துகளின்
உத்திநீ, உண்மைநீ, உன்னத ஞானத்தின்
உற்பத்திநீ
சத்துநீ, சந்தம் நீ, சாரும் கலைகளின்
சங்கதிநீ
முத்திநீ தந்தே முறையுடன்
காத்தருள் மொய்குழலே!
வாவென்று சொன்னால் வரவேண்டும், வந்து வளக்கவிதை
தாவென்று சொன்னால் தரவேண்டும், நீவந்து தான்நடிக்க
நாவொன்று வைத்துளேன், நன்றுநீ வாரா நலிவுசெய்தால்
ஓவென்று அழுவேன், உனக்கிது தேவையா உத்தமியே!
வேடிக்கை செய்வாய், விளையாடிச் சற்றே விலகிநிற்பாய்
வாடிக்கை என்று மனத்தில்
உழன்று வருந்துகையில்
நாடிக்கை பற்றி நகைப்பாய், உனதருள் நாடகத்தில்
தேடிப் பிடித்த திரையோநான், வாணியென் தெய்வதமே!
வித்துகள் வைத்துளாய், விதைக்கும் நல்ல விளைநிலமாய்
ஒத்தை விதையினை என்னுளே
ஊன்றிடு உனதருளால்
அத்தை வளர்த்தே அகிலம் பயன்பெற
ஆணைகொடு
செத்தையும் உன்றன் திருவிழி
நோக்கில் சிறந்திடுமே!
என்றன் மனந்தான் இடம்விட் டிடமாய் எகிறியது
கன்று குதித்திடில் கண்ணசை வில்லதைக் கட்டுள்வர
நின்றடக் கும்பசு நேராய் எனக்கோர் நெறியருளே!
அம்மா, சரஸ்வதி, யாருளர் நின்போல் அருள்புரிய?
எம்மால் இயன்ற தெதுவென் றறிகுவை என்பதனால்
இம்மா புவனத் தெனது செயல்கள் இணையிலதாய்ச்
செம்மாந் தியங்கத் திருவருள் காட்டிச் சிறப்பருளே!
No comments:
Post a Comment