Monday, May 13, 2019

முருகன் ஊஞ்சல்

அறுமுகன் ஊஞ்சல்

ஊஞ்சலிது ஊஞ்சலிது ஒய்யார ஊஞ்சல்
   ஒப்பில்லாத் திருமுருகன் ஆடுகிற ஊஞ்சல்
வாஞ்சையுடன் பார்வதியாள் ஆட்டுகிற ஊஞ்சல்
    மாதேவன் கைபிடித்தே இயக்குகிற ஊஞ்சல்
தீஞ்சுவைசேர் கானமங்கே கின்னரர்கள் பாட
    தேவானை வள்ளியுடன் கந்தனமர் ஊஞ்சல்
ஆங்குமயில் சேவலொடு வேல்சேர்ந்தி ருக்க
     அகிலாண்டம் அத்தனையும் போய்த்திரும்பும் ஊஞ்சல்

காலமெல்லாம் ஓய்வின்றி ஆடுகிற ஊஞ்சல்
     கந்தன்வள்ளி தெய்வானை களிக்கின்ற ஊஞ்சல்
கோலவிழி மாதர்பலர் கொண்டாடிப் போற்றிக்
     கொண்டுவந்து பிடி சுற்றிப் போடுகிற ஊஞ்சல்
சீலமுறு லாலியிசை வாணிவந்து பாட
      திருமகளும் கைதட்டி ஆடுகிற ஊஞ்சல்
சூலமுடை காளியவள் சுந்தரியாய் வந்து
      சுந்தரனாம் முருகனுக்கு வாழ்த்துரைக்கும் ஊஞ்சல்

கந்தருவர் நாரதரும்  வாத்திய மிசைக்கக்
      கணபதியார் இயக்குகிற கானமுயர் ஊஞ்சல்
இந்திரன் தன் தேவியுடன் இழுத்தாட்டும்  ஊஞ்சல்
      எண்ணற்ற இயக்கர்களும்  மேருவிலிருந்தே
வந்தவர்கள் யோகினிகள் வரிந்தாட்டும் ஊஞ்சல்
     வாகான நவ வீர்ர் வரவேற்கும் ஊஞ்சல்
இந்தவகை இத்தனைபேர் என்றிசைக்கா வண்ணம்
      இருக்கின்ற தேவரெலாம் இயக்குகின்ற ஊஞ்சல்

இடைவெளியே இல்லாமல் எழுந்தாடும் ஊஞ்சல்
       எழில்மருகன் தனைத் திருமால் இசைந்தாட்டும் ஊஞ்சல்
அடைமழையாய்த் திருப்புகழைத் தொடராக அங்கே
       அருணகிரி பாடவரும் அழகான ஊஞ்சல்
உடையவனைச் சீராட்டி  வந்தவர்கட் கெல்லாம்
        உம்பர்தருத் தேனுமணி பரிசளிக்கும் ஊஞ்சல்   
மடைதிறந்த வெள்ளம்போல் பிரமன் மறை யோத
       மறையவர்கள் வாழ்த்துகிற மாபெரிய ஊஞ்சல்

முப்பத்து முக்கோடி தேவர்களும் நின்று
      முறைமுறையே கண்ணூறு கழிக்கின்ற ஊஞ்சல்
அப்பக்கம் வீரபத்ரன் ஐயப்பன் காக்க
       அகிலாண்ட நாயகியாள் அருள்கொடுக்கும் ஊஞ்சல்
ஒப்பற்ற நாதஸ்வரம் மங்கலவாத் யங்கள்
        ஒலிகானம் பின்பற்றி ஊதுகிற ஊஞ்சல்
அப்பப்பா இதைப்போல எங்குமிலை யென்றே
         அரம்பையரும் பல்லாண்டு பாடுகிற ஊஞ்சல்
                                        ( ஊஞ்சலிது..)
நூற்பலன்
ஆவலாய்த் தேவர் அறுமுகனை ஆட்டுகிற
காவிய ஊஞ்சல் கவிபாட – மேவுகிற
வெவ்வினைகள் தீர்ந்துவிடும் மேலுலகம் சித்திக்கும்
எவ்விதத்தும் இன்பம் எழும்.
       

No comments:

Post a Comment