Monday, May 13, 2019

பாலாவுக்குப் பாமாலை


பாலாவுக்குப் பாமாலை


புத்தகம் அட்ச மாலை
       பொருந்திடும் இரண்டு கைகள்
பத்தரைக் காக்க வென்றே
       பரிந்திடும் அபயம் ஓர்கை
உத்தம மாக வேண்ட
       உதவிடும் வரத ஹஸ்தம்
இத்தனை வனப்பென் றேயாம்
       இயம்பிட அரியள் பாலா!                  1


மூவுல கத்தும் காணா
       மோகன அழகுத் தெய்வம்
ஏவல்கள் எதுவா னாலும்
       எளிதிலே வீட்டும் தெய்வம்
காவலாய் அமையும் தெய்வம்
       கன்னியாய்  நம்மைக் காக்க
ஆவலாய் இருக்கும் தெய்வம்
       ஆற்றலில் மிகுந்த பாலா!                  2


அண்டமும் குலுங்கும் வண்ணம்
       அடர்திறல் கர்ணீ ஏறிப்
பண்டனின் புதல்வர் வீயப்
       பாலகி யாய்ப்போ ரிட்டாள்
எண்டிசை அனைத்தும் சுற்றி
       எதிரியைக் கலக்கும் காட்சி
கண்டவர் வியந்தார், அன்னை
       கட்டியே அணைத்துக் கொண்டாள்         3


ஒன்பது வயதுக் கன்னி
       உத்தமி, பக்தர்க் குள்ள
புன்னறி யாமை போக்கிப்
       புத்தறி வூட்டும் தெய்வம்
தன்னருள் விளையாட்டாகத்
       தந்திடும் வாலைப் பெண்ணாள்
உன்னதத் தெய்வம் போற்றி
       உயர்பதம் போற்றி போற்றி                4


பாலா உன்றன் ஐம்க்லீம்சௌ                          
       பழகும் நாவில் சொல்லேறிக்
கோலா கலமாய் விளையாடும்
       கொஞ்சிப் பேசும் பெண்ணேநீ
மூலா தாரம் முதலாக
       முடுக்கி விட்டுச் சித்திகளில்
ஏலா தவையும் இயல்வனவாய்
       இயங்க வைப்பாய், காப்பாயே!             5


No comments:

Post a Comment