Friday, May 10, 2019

வீரபத்ரர் கும்மி


வீரபத்ரர் கும்மி

கும்மியடி பெண்ணே கும்மியடி - மிகக்
        கோலாகலமாகக் கும்மியடி
நம்ம குலதெய்வம் வீரபத்ரர் புகழ்
        நாமத்தைச் சொல்லியே கும்மியடி

நீலகண்டன்முடிக் கற்றையின் மூலமே
        நீதி விளங்க உதித்தவராம்
காலகாலர்களும் தேவர் முனிவரும்
        கண்டு நடுங்கிட வைத்தவராம்

ஆணவம் கொண்டவன் தட்சனின் வேள்வியை
        ஆர்க்கும் சினங்கொண் டழித்தவராம்
பூணரும் ஆயுதம் பற்பல தாங்கியே
        புன்மைகள் வேரோ டொழித்தவராம்

எத்தனை ஆயுதம் தாங்கிய பேரையும்
        எட்டி உதைத்த பெருந்தீரர்
சுத்தி அடித்த அடியினில் விண்ணவர்
        தூள்பட வைத்த அருஞ்சூரர்

நான்முகன் ஓட ஹரி ஓட, அந்த
        நாரதர் ஓட , குரு வோட
வான்கிழியவந்த வீரர்முன்னே பலர்
        மாண்டனர் உள்ளே பயங்கூட

ஆடும் சிவபிரான் அம்சமாய்த் தோன்றியே
        ஆளும் அகோரத் திருமூர்த்தி
நாடிடும் பக்தர்கள் நல்லபடி வாழ
        நல்குவர் என்றும் பெருங்கீர்த்தி

அன்பு வடிவான ஆண்டவன் , பக்தர்கள்
        அன்பில் பெரிதும் மகிழ்பவராம்
சின்னக் கனியொன்றே ஆயினும் அன்புடன்
        சேர்த்திடில் உள்ளம் நெகிழ்பவராம்

அள்ளிக் கொடுத்திடும் வள்ளல் வீரபத்ரர்
        அன்புத் திருவடி போற்றுங்கடி
கொள்ளக் கொள்ளக் கொள்ளக் கொண்டு கொடுத்திடும்
        கோமான் புகழ் பறை சாற்றுங்கடி

தெற்கிலந் தைக்குளம் தன்னில் உறைந்திடும்
        தெய்வமெங்கள் குல தெய்வமடி
அற்புதம் செய்கின்ற வீரபத்ரர் பதம்
        அன்புடன் போற்றியே உய்வமடி

தொந்திக் கணபதி சுப்ரமண்யர் சாஸ்தா
        சூழ்ந்திடும் அஸ்வஸ்த நாராயணர்
முந்தும் கருப்பன் இருளன் உடனருள்
        மூர்த்தியைப் போற்ரியே ஆடுங்கடி

வாழிய வாழிய வீரபத்ரர் அருள்
        வாரி வழங்கிட வாழியவே
வாழிய வாழிய மக்கள் அனைவரும்
        வாழிய வாழிய வாழியவே!



No comments:

Post a Comment