Tuesday, May 14, 2019

வல்லமை தாராயோ?


வல்லமை தாராயோ?

சொல்லை நடத்துகிற - தாயே
ஜோதிப் பரம்பொருளே
வல்லமை தாராயோ - என்றன்
வார்த்தை பலித்திடவே!

மழையினை வாவென்றால் - அது
வந்து பொழியட்டும்
மொழியில் செம்மொழியாய்த்- தமிழை
முன்னம் மொழியட்டும்

என்சொல் கவிதையென - உலகம்
ஏற்று மகிழட்டும்
இன்னும் இன்னும் பெருமை- வந்தே
ஏற்றம் திகழட்டும்

தீவிர வாதமெல்லாம்  நாட்டில்
தேய்ந்து மறையட்டும்-
காவிரி ஆற்றினிலே -வெள்ளம்
கரைபுரண் டோடட்டும்

நலந்தரும் சொல்லெல்லாம் - என்றன்
நாவில் பிறக்கட்டும்
இலந்தை நல்லவனே- என்னும்
ஏற்றம் சிறக்கட்டும்.



No comments:

Post a Comment