அவனிருக்கிறான்
என்னவோ பெரிதாக உன்னத மாகவே
இங்குநான் செய்தேன் என
எகத்தாள மாகவே தகத் தகாயம் செய்து
எகிறிடும் ஏ மானிடா
சின்னதோர் எறும்பதன் சிறியதோர் காலிலே
திரிவதற்கேதுவாக
சிறியதோர் மூட்டினைச் செய்தவன் யாரடா
சிந்தித்து நீ பாரடா
தின்றிடும் யாவையும் சேர்ந்திடும் வயிற்றுளே
செரித்திடக் கூடுமென்றால்
தின்னாமல் தன்னையே வயிறதும் காத்திடும்-
சேர்பொறி யார்செய்தது?
உன்தந்தை விந்துளே உன்தாயின் முட்டையில்
உன்னுருப்பொதிந்து வைத்தே
ஓரரும் பதிவிதினை ஒப்பிலை எனும்வகை DNA
உண்டாக்கி வைத்தவர் யார்?
(though stomach can digest flesh , it does not eat itself.
There is a protection. Who has designed this?)
ஒப்பனை வாழ்க்கையில் ஒப்பனை செய்துநீ
ஓட்டுகின்றாய் வாழ்க்கையை
ஒப்பனையாய் நிலம், ஓங்குநீர் தீ, வளி
உச்சிக் குடைவானமும்
செப்பரி தாகவே ஒப்பிலா வகையிலே
செய்திட்ட வித்தகன் யார்?
செப்பியவை யாவையும் அப்படி உன்னுளே
சேர்ந்திட வைத்தவர் யார்?
செப்படா ஓருயிர்ச் செல்லினைச் செய்திடும்
தேர்ச்சி உடையனாநீ?
சிந்தித்துப் பாரடா அந்தியைப் போலொரு
சித்திரம் நீசெய்வையா?
தப்பியுன் மூளையில் ஓர்நரம் பிற்றிடில்
சந்தி சிரித்துவிடுமே
தப்பாமல் எத்தனை சூத்திரம் நம்முளே
சமைத்தான் அதைத் தேரடா!
நானூறு பில்லியன் தாரகைக் கூட்டமுள
ஆகாய கங்கை தனிலே Milky way- a galaxy)
நம்சூரியன் சிறு நட்சத்திரம் புவி
நாடி அதைச் சுற்றுமாம்
ஆனாத அண்டங்கள் கோடிபல கோடியாம்
அளவிடாத் தொலைதூரமாம்
அவற்றுளே ஆகாய கங்கையும் ஒன்று புவி
ஆமாம் ஒரு புள்ளியாம்
கோனாக அண்டாதி அண்டங்கள் யாவையும்
கூத்தாட்டுவான் யாரடா
குண்டூசி செய்யவும் வடிவமைப்புச் செய்து(
கொடுப்பவன் தேவையன்றோ?
ஏனோடா மானிடா இதனைநீ ஓராமல்
இல்லை இல்லை என்கிறாய்
இல்லை இல்லை இல்லை இல்லையென்றேயிங்கு
இருப்பதே அதுதானடா!
ஓரரயி ரத்தின்மேல் ஆராய்ந்து சாதித்த
ஒப்பற்ற விஞ்ஞானியாம்
ஓங்குபுகழ் எடிசனும் ஓர்நாத்திகர் அவர்
உரைத்ததைச் சொல்லுகிறேன்
“ஆராய்ந்து பார்த்ததில் அமிழாமல் பனிக்கட்டி
ஆக்கிப் படைத்ததற்கே
அதைத்திட்டம் செய்திட்ட யாதோ பெருந்திறல்
அதனைநான் வணங்குகின்றேன்”
கூரான இம்மியைக் கூறுபோட்டுப் போட்டு
கூறினும் போடவொண்ணாக்
கூறிலே கூட நீ இல்லையே மானிடா
குதிக்கிறாயே ஏனடா?
ஓராலம் விதையிலே ஓர்மர வார்ப்படம்
உள்ளதை நீதேரடா!
ஒன்றுமில் லாததோர் சூனியம் உன்னையவ்
வொன்றுக்குப் பின்வையடா!
(சூனியம் is zero.
Of its own no value. If you put behind one it multiplies even the one)
No comments:
Post a Comment