Monday, May 13, 2019

ஸ்ரீவனதுர்க்கா பஞ்சகம்

ஸ்ரீ வனதுர்க்கா பஞ்சகம்
அழகிய தாமரை ஆசனம் நின்றே அருள்பவளே
தழைமலி காட்டிடைத் தங்கிடும் தேவி தயாபரியே
விழைகிற காரியம் வெற்றி அடைய விதிப்பவளே
மழைமுகில் மேனி வனப்புள தேவி வனதுர்க்கையே!

அச்சம், அவலம், அவதி, அதிர்ச்சி, அலமருதல்
உச்சம் அடைந்தே உழலும் நிலையினில் உள்ளவர்கள்
நிச்சய மாக நினதருட் பேற்றை நினைந்துவிடின்
வச்சிர மாக மகிழ்ச்சி அளிப்பாய் வனதுர்க்கையே!

மிருக சிரமெனும் விண்மீன் தலைவி, வினயமுடன்
தருக நலமெனத் தண்ணருள் வேண்டிச் ஜபிப்பவர்க்கே
உரியர் எனவே உடனே உதவிடும் உத்தமியே
வரமே தருவாய் வழிகாட் டிடுவாய் வனதுர்க்கையே!

வனத்திடை யேயும் மனத்திடை யேயும் வதிபவளே
கனத்திடும் பில்லி, கருப்புப் பிடிகள் களைபவளே
நினைத்திடும் பக்தர் நெறிமுறை பற்றி நினைத்தொழவே
மனத்துயர் நீக்கி வழித்துணை ஆவாய் வனதுர்க்கையே!

தினைத் துணை யேனும் சிரத்தை யுடனே ஜெபிப்பவர்க்குப்
பனைத்துணை யாகப் பரிந்தருள் நன்மை படைப்பவளே
நினைத்துணை யாக நினதடி போற்றுமென் நெஞ்சகமே
வனத்திணை யாக வதிந்தருள் தேவி வனதுர்க்கையே!


No comments:

Post a Comment