Saturday, May 11, 2019

வெள்ளமெனப் பொழிவாய்


வெள்ளமெனப் பொழிவாய்!

சிந்து  

கள்ளமிலா மனம் கண்டு வதிந்திடும் கான இசைக் கலையே-உயர்
கல்வி தரு நிலையே
வள்ளல் இவன் தரு வார்த்தைதனில் வரும் வாழ்த்துப் பலிக்குமென-ஒளி
வந்து கொழிக்குமென
பள்ள முறைந்திடு பாமரரும் சொலும் பட்டயமே பெறவே-நலம்
பாவினிலே உறவே
வெள்ளமெனப் பொழி வெள்ளமெனப் பொழி,
வெள்ளமெனப் பொழியே!

எள்ளி நகைத்தவர் ஏளனம் செய்தவர் எண்ணி வருந்திடவே-என்னுள்
ஏற்றம் இருந்திடவே
உள்ள மனைத்திலும் உன்திரு மந்திரம் ஓங்கி நிலைத்திடவே-கவி
ஓடிச் சலித்திடவே
தெள்ளு தமிழ்மொழி தேனருவிப் புனல் துள்ளி வரும்படியே-சுவை
அள்ளித்தரும் படியே
வெள்ளமெனப் பொழி வெள்ளமெனப் பொழி
வெள்ளமெனப் பொழியே!

முள்ளின் முனைதரு கூர்மை எனவரு
மோனை நடம்பெறவேஅதில்
வானம் இடம்பெறவே
கள்ளை,விரைந்திடு காற்றை, புனலினை,
தீயைக் கடைந்தெடுத்தே-சொல்
தேவப் படை தொடுத்தே
அள்ளப் பெருகிடும் ஆற்றல் அதிசயம்
நாவில் பெரும் பொருளை-உன்
நல்ல திருவருளை
வெள்ளமெனப் பொழி வெள்ளமெனப் பொழி
வெள்ளமெனப் பொழியே!

பிள்ளைப் பருவத்தில் உள்ளம் கவர்ந்தெனைப்
பேசிட வைத்தவளே-கவி
வீசிட மொய்த்தவளே
தெள்ளத் தெளியத் தெளியாதன பல
தேர்ந்திடச் செய்தவளே-ஒளி
ஆர்ந்திடப் பெய்தவளே
தள்ளி யிருப்பதும் தாய்க்கழ கில்லையே
சார்ந்தென்றன் நாவினிலே-நான்
சாற்றிடும் பாவினிலே
வெள்ளமெனப் பொழி, வெள்ளமெனப் பொழி,
வெள்ளமெனப் பொழியே!

No comments:

Post a Comment